அரசு வேலை என்பது நடுத்தர வர்க்கத்தின் கனவு. படித்தவர்களின் இலட்சியம். தலைமுறைக்கான பாதுகாப்பு. அதற்காகத்தான் அரைச் சம்பளமாக இருந்தாலும் அரசாங்க சம்பளமாக இருக்க வேண்டும் என்பதே ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் எதிர்பார்ப்பு. அரசுப் பணிகளின் காலியிடங்கள் நிரப்பப்படும் விகிதம் குறைந்துகொண்டே உள்ள நிலையிலும், அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வரும் நிலையிலும், மத்திய-மாநில அரசுகளின் தேர்வாணையங்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் போன்றவை மட்டுமே கடைசிக்கட்ட நம்பிக்கை வெளிச்சமாக உள்ளன. அந்த வெளிச்சத்தையும் ஊதி அணைக்கும் வேலையைத் தேர்வாணையமே செய்வது எதிர்காலத் தலைமுறையை இருட்டில் தள்ளிவிடும்.
தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் சார்பில் பிப்ரவரி 8ந் தேதி நடைபெறவிருந்த குரூப்-2 தேர்வுகள், தேர்வு மையங்கள் ஒதுக்கப்படுவதில் ஏற்பட்ட தொழில்நுட்ப காரணங்களால் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டன. தமிழ்நாட்டு வரலாற்றில், தேர்வு நாளில் தேர்வை ரத்து செய்தது என்பதே இதுவே முதல் முறை என்பதால் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி, கடும் விமர்சனத்தை இது உண்டாக்கியுள்ளது.
மாநில அரசுப் பணிகளுக்கான குரூப்1, குரூப்2, குரூப் 4 போன்ற தேர்வுகள் இளைய தலைமுறையிடம் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்துவது வழக்கம். தேர்வுத் தேதி எப்போது அறிவிப்பார்கள் என்று எதிர்பார்த்து, அதற்கேற்ப சொந்தமாகவோ, தனியார் பயிற்சி மையங்கள் மூலமாகவோ தங்களைத் தயார்படுத்திக்கொண்டு, நிறைய படித்து, தேர்வு நாள் அறிவிக்கப்பட்டதும், மேலும் கடினமாக உழைத்து, தேர்வு எழுதி மதிப்பெண் பெறுகிறார்கள். பள்ளி இறுதி வகுப்பு முடித்திருந்தால் போதும் என்கிற அளவிலான வேலைகளுக்குக்கூட பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள் போட்டி போடுகிற அளவிற்கு அரசு வேலைகளின் எண்ணிக்கை சுருங்கிவிட்டதால், எப்படியாவது தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெற்று வேலை வாங்கிவிடலாம் என்பதே இளையதலைமுறையின் எதிர்பார்ப்பு.
அதுபோலத்தான், குரூப் 2 தேர்வுக்கும் தயாராகியிருப்பார்கள். சென்னையில் மூன்று கல்லூரிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், ஹால் டிக்கெட்டில் இருந்த விவரமும், தேர்வு மையங்களுக்கு நேரில் சென்ற போது இருந்த விவரமும் மாறியிருந்ததால், குழப்பம் ஏற்பட்டு, அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு, அதிருப்தி அடைந்த தேர்வாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, அதன் பிறகே குரூப்2 தேர்வுகள் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது.(Online Tamil News)
சென்னையில் இந்தப் பிரச்சினை நிகழ்ந்த நேரத்தில் வெளிமாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்கள் பலவற்றில், வினாத்தாள் கொடுக்கப்பட்டு, தேர்வு எழுதத் தொடங்கிவிட்டனர். அதன்பிறகே, தேர்வு ரத்து என்கிற செய்தி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரு மையத்தில் தேர்வு முடிவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பாகத்தான் ரத்து என்கிற செய்தி கிடைத்துள்ளது. பல மாதங்கள் படித்து, மணிக்கணக்கில் தேர்வெழுதியவர்கள் தங்களின் அத்தனை உழைப்பும் வீணானதை நினைத்து கண்ணீருடன் வெளியே வந்துள்ளனர். வேறொரு தேதியில் தேர்வு நடைபெறும் என பின்னர் அறிவிக்கப்பட்டது.
சென்னையில் தேர்வு மையங்களில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சொல்லப்படுகிறது. இது குறித்து முழுமையாக விசாரிக்கப்படவேண்டும். ஏனென்றால், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் குளறுபடிகளும், முறைகேடுகளும் பல ஆண்டுகளாகவே நிகழ்ந்து வருகின்றன. முந்தை ஆட்சிக்காலங்களில் பல மோசடிகள் வெளிச்சத்துக்கு வந்தன. ஆட்சி மாறும்போது இந்த நிலைமை மாறும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை. அரசு எடுத்த நடவடிக்கைகள் முழுமையான பயன் தரவில்லை என்பதையே இந்த ‘தொழில்நுட்பக் கோளாறு’ விவகாரம் காட்டுகிறது.
மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகளிலும் பல மோசடிகள் பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. மத்திய பிரதேசத்தின் பணியாளர் தேர்வாணையம் தொடர்பான வியாபம் ஊழல் பல உயிர்களைக் காவு வாங்கியது. ஆள்மாறாட்டங்கள், இலஞ்சம், ஊழல் போன்ற குற்றச்சாட்டுகள் எல்லா பக்கமும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. அதில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தன்னுடைய நிர்வாகக் கோளாறுகளை மாற்றிக்கொள்ள முன்வரவேயில்லை. அதிகாரிகள் மாற்றப்பட்டு, ஆணையத்தின் உறுப்பினர்கள் புதிதாக நியமிக்கப்பட்டாலும் குளறுபடிகள் தொடரவே செய்கின்றன.
இளைய சமுதாயத்திற்கு புதிய வேலைவாய்ப்பகளை உருவாக்குவதில் தேர்வாணையத்தின் பங்கு முக்கியமானது. அந்த முக்கியத்துவத்தை உணராமல், வேறு கணக்குகளுடன் செயல்படும் போக்கு கொண்ட நிர்வாகத்தால், தேர்வாணையத்தின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படுவதேயில்லை.
தேர்வுகளில் ஏற்படும் குளறுபடிகள் தேர்தல் களத்திலும் எதிரொலிக்கும் வாய்ப்பு அதிகம். தேர்தல் நெருங்கி வருவதை உரியவர்கள் கவனத்தில் கொண்டு, தேர்வாணையத்தின் அநியாயங்களை நீக்கி, தேர்வு எழுதுகிற இளைய தலைமுறைக்கு நியாயம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.



