ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுத்ததற்கு என்ன காரணம்? பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது தாக்குதல் நடத்தியதற்கு என்ன காரணமோ அதுதான். இஸ்ரேல் யூத மத நாடு. ஈரான் இஸ்லாம் மத நாடு. இஸ்ரேலுக்கு அமெரிக்கா துணையாக நிற்பதற்கு என்ன காரணம்? இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, இஸ்ரேல் என்ற நாடு உருவாவதற்கு அமெரிக்கா முக்கிய காரணம். அமெரிக்காவின் முழு ஆதரவும் இஸ்ரேலுக்கு உண்டு. ஈரான் மீது இஸ்ரேலுக்கு மதரீதியான பகை. அமெரிக்காவுக்கு ஈரான் மீது ஆதிக்க வெறி.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தத் தாக்குதலுக்கான காரணம் பற்றி விளக்கும்போது, “ஈரானிடம் ஆணு ஆயுதங்கள் இருப்பதால், அது உலகத்திற்கு பேராபத்தை உருவாக்கும். அந்த ஆபத்தைத் தடுக்கத்தான் அமெரிக்கா தாக்குதலைத் தொடர்கிறது” என்கிறார். இருபது ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் அதிபராக ஜார்ஜ் புஷ் ஜூனியர் இருந்தார். அவர் ஈராக் மீது படையெடுத்தார். அதற்கு அவர் என்ன காரணம் சொன்னார்? ஈராக்கிடம் பேரழிவு ஆயுதங்கள் இருக்கின்றன. அவை உலகத்திற்கு ஆபத்தை உண்டாக்கும். அதனால் படையெடுத்திருக்கிறோம் என்றார் ஜார்ஜ் புஷ் ஜூனியர்.
ஈராக்கை அமெரிக்கா தாக்கித் தகர்த்தது. பல இடங்களில் சோதனையிட்டு, இறுதியாக ஈராக் அதிபர் சதாம் உசேனை ஒரு பதுங்கு குழியிலிருந்து கைது செய்தது. ஒரு தரப்பான விசாரணைக்குப் பிறகு, சதாம் உசேனைத் தூக்கிலிட்டுக் கொன்றது. ஈராக்கை அமெரிக்காதான் அழித்ததே தவிர, ஈராக்கில் உலகை அழிக்கும் பேரழிவு ஆயுதம் எதையும் அமெரிக்கா கண்டுபிடிக்கவுமில்லை. அதுபற்றி எந்த விளக்கமும் தரவுமில்லை. எண்ணெய் வளம் மிக்க நாடுகள், பொருளாதாரத்திற்கான சந்தை கொண்ட நாடுகள், அமெரிக்காவின் அரசியல் கொள்கைகளுக்கு மாறான ஆட்சிமுறை கொண்ட நாடுகள் இவற்றைக் குறிவைத்து தாக்கி, தன் வசப்படுத்திக் கொள்வதே வல்லாதிக்க அமெரிக்காவின் போக்கு.

கியூபா அழகான நாடு என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் இப்போதுதான் புதிதாகக் கண்டுபிடித்திருக்கிறார். ஏன் இந்த வர்ணனை? அவரது அடுத்த குறி, அமெரிக்காவின் அருகே உள்ள தீவு நாடான கியூபா மீது படையெடுப்பதுதான். பிடல் காஸ்ட்ரோ தலைமையில் கம்யூனிச கொள்கையுடன் கட்டமைக்கப்பட்ட கியூபா எப்போதுமே அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல்தான். இப்போது காஸ்ட்ரோ இல்லை. கியூபாவில் கம்யூனிசம் இருக்கிறது. முதலாளித்துவக் கொள்கை கொண்ட வல்லரசான அமெரிக்காவுக்குப் பக்கத்தில் கம்யூனிச நாடான கியூபாவை எத்தனை காலத்திற்கு விட்டு வைக்க முடியும்? அதனால்தான், கியூபாவை குறி வைக்கிறது அமெரிக்கா. மற்றொரு கம்யூனிஸ்ட் நாடான வடகொரியா மீதும் அமெரிக்காவுக்கு கண் உண்டு.
இத்தனைப் போர் வெறியுடனும், உலக அளவில் அதிகப் பகையுணர்வை உருவாக்கிய அமெரிக்க அதிபர் என்ற பெயருடனும் உள்ள டிரம்ப், தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கவேண்டும் என்று அந்தப் பரிசு வழங்கும் குழுவினருக்கே மிரட்டல் தொனியில் கோரிக்கை வைத்தவர். சில வாரங்களுக்கு முன் வெனிசூலா நாட்டின் மீது படையெடுத்து, அதன் அதிபரையும் மனைவியையும் கைது செய்து தனது நாட்டில் சிறை வைத்துள்ளது அமெரிக்கா. அந்த நாட்டின் இடைக்கால அரசுக்குத் தலைமை வகிப்பவர், கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். அந்த அம்மையார், நோபல் பரிசை தனக்குப் பரிசாக வழங்கிவிட்டார் என்று டிரம்ப் சொல்லிக் கொண்டார்.

படையெடுக்க முடியாத நாடுகளுக்கு வரி விதித்து, பொருளாதாரப் போர் தொடுப்பதும் அமெரிக்க அதிபரின் நடவடிக்கையாக இருக்கிறது. அமெரிக்காவை எதிர்கொள்ளவோ அதன் மோசமான செயல்களைக் கண்டிக்கவோ கூடிய வலிமை இன்று உலகின் பல நாடுகளுக்கு இல்லை. இந்தியா உள்பட இந்த நிலைமைதான். ரஷ்யா, சீனா, வடகொரியா போன்ற நாடுகள் அமெரிக்காவை எதிர்க்கின்றன.
ஈரான் மீது இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்கா தாக்குதல் நடத்தும் நிலையில், முஸ்லிம் நாடுகளான ஐக்கிய அரபு நாடுகளால் அமெரிக்காவைக் கண்டிக்க முடியவில்லை. மாறாக, ஐக்கிய அமீரகத்தின் பல நாடுகளும் அமெரிக்காவுக்கானப் படைத்தளங்களாக உள்ளன. அந்தப் படைத்தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல், விமான குண்டுவீச்சு நடத்துவதால் பல பகுதிகளும் எரிகின்றன. இத்தகைய போர்ச்சூழலில் துபாய், சவுதி அரேபியா, குவைத் போன்ற நாடுகளில் விமானப் போக்குவரத்து முடங்கியிருக்கிறது. அங்கே சென்ற இந்தியர்கள் உள்பட எல்லா நாட்டு மக்களும் தங்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருக்கின்றன.
ஆதிக்க உணர்வும் அது உருவாக்கும் போர் வெறியும், உலகத்தின் நிம்மதியைக் குலைத்துப் போட்டிருக்கிறது.(Online Tamil News)



