அமெரிக்காவின் முன்னணி செய்தி நிறுவனமான வாஷிங்டன் போஸ்ட் (Washington Post), தனது ஊழியர்களில் சுமார் 30 சதவீதத்தினரை, அதாவது 300-க்கும் மேற்பட்டோரை அதிரடியாகப் பணிநீக்கம் செய்துள்ளது. அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸுக்குச் சொந்தமான இந்த நிறுவனம், கடந்த சில ஆண்டுகளாகச் சந்தித்து வரும் கடும் நிதி நெருக்கடி மற்றும் குறைந்து வரும் வாசகர்கள் எண்ணிக்கையைச் சமாளிக்க இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. இந்த அதிரடி முடிவால் அந்நிறுவனத்தின் விளையாட்டுப் பிரிவு மற்றும் புத்தக விமர்சனப் பகுதிகள் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளன.

மேலும், இதில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூரின் மகன் இஷான் தரூரும் இந்தப் பணிநீக்கப் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த நிறுவனத்தில் சர்வதேச விவகாரங்களுக்கான கட்டுரையாளராகப் பணியாற்றி வந்த இஷான் தரூர், இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் மிகவும் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். குறிப்பாக, “இது ஒரு மோசமான நாள்” என்று குறிப்பிட்ட அவர், தன்னுடன் பணியாற்றிய மிகச்சிறந்த பத்திரிகையாளர்கள் பலரும் இன்று வேலையை இழந்து நிற்பது வேதனையளிப்பதாகத் தெரிவித்துள்ளார். (Online Tamil News)

டிஜிட்டல் யுகத்தில் மாறிவரும் ஊடகச் சூழலுக்கு ஏற்ப நிறுவனத்தைத் தகவமைக்க இத்தகைய கடினமான முடிவுகள் தவிர்க்க முடியாதவை என நிர்வாகத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒரு செய்தி நிறுவனம் ஒரே நாளில் இத்தனை ஊழியர்களை வெளியேற்றியிருப்பது ஊடகத்துறையினரிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இஷான் தரூரின் இந்த நிலைக்கு அவரது தந்தை சசி தரூரும் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.



