ஐம்பது ஆண்டுகால அரசியல் அனுபவம் வாய்ந்த, ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராகவும், பலமுறை அமைச்சரவையில் அங்கம் வகித்த அனுபவம் உள்ளவருமான, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுடன் அரசியல் செய்தவருமான கே.ஏ.செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி உடனான பிரச்சனையினால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் தவெகவுக்கு சென்றார்.
அவர் தவெகவுக்கு சென்றபோது, இத்தனை அனுபவம் வாய்ந்த செங்கோட்டையன் புதுக்கட்சி தவெகவுக்கு செல்வது அக்கட்சிக்குத்தான் பலமே தவிர, செங்கோட்டையனுக்கு எந்தவிதத்திலும் அது பலனளிக்காது என்று விமர்சனம் எழுந்தன.

அது மாதிரியே செங்கோட்டையன் தவெகவில் அதிருப்தியில் உள்ளார் என்று செய்திகள் வருகின்றன. தவெக தலைவர் விஜய் வெளியிட்ட தேர்தல் பிரச்சாரக்குழுவில் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனாவுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தில் மூத்த அரசியல்வாதி கே.ஏ.செங்கோட்டையன் பெயர் இருந்தது அவரது ஆதரவாளர்களை அதிருப்தி அடைய வைத்ததாகவும், தொடர்ந்து தவெகவில் தான் புறக்கணிக்கப்படுவதால் செங்கோட்டையனும் அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வந்தன. மாவட்ட நிர்வாகக்குழு விவகாரத்தில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்துக்கும் செங்கோட்டையனுக்கும் இடையே தகராறு என்றும் செய்திகள் பரவுகின்றன.

ஆனந்த் இவற்றை எல்லாம் மறுத்துள்ளார். பனையூரில் நடந்த மாற்றுக்கட்சியினர் தவெகவில் இணையும் விழாவில் பேசிய அவர், ’’50 ஆண்டுகால மூத்த அரசியல்வாதி, 9 முறை எம்.ஏல்.ஏ.ஆக இருந்தவர் செங்கோட்டையன்’’ என்று புகழாரம் சூட்டினார். தொடர்ந்து பேசிய ஆனந்த், ‘’எனக்கும் செங்கோட்டையனுக்கும் எந்த சண்டையும் இல்லை. எங்களுக்குள் சின்னச்சின்ன சண்டை கூட இல்லை. நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். இங்கே யாரும் பெரியவர் சிறியவர் இல்லை. தவெகவில் தலைவருக்கு கீழ் உள்ள அனைவருமே தொண்டர்கள்தான்’’ என்றார்.



