கொல்கத்தாவின் ஆனந்தபூர் பகுதியில் உள்ள Wow! Momo நிறுவனத்தின் குடோனில் ஜனவரி 26, 2026 அன்று அதிகாலை 3 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
விபத்து நேரத்தில் குடோனின் பிரதான கதவு பூட்டப்பட்டிருந்ததாகவும், இதனால் உள்ளே இருந்த தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் இருந்தனர் என்று அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. மேலும், உயிரிழந்தவர்களில் ஒருவரான பங்கஜ் என்பவர் தனது மனைவியிடம், “குடோன் முழுவதும் தீப்பிடித்துள்ளது, தப்பிக்க வழியில்லை; இன்னும் 5 நிமிடங்களில் நாங்கள் இறந்துவிடுவோம், மகளையும் உன்னையும் பார்த்துக் கொள்” என்று அழைத்து கதறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.(Online Tamil News)

அதிகாரிகள் விசாரணையில், இந்த குடோன் தீயணைப்புத் துறையின் முறையான அனுமதி இல்லாமல் (Fire Clearance) சட்டவிரோதமாக இயங்கி வந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து குடோன் உரிமையாளர் கங்காதர் தாஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மேற்கு வங்க அரசு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கும் நடவடிக்கை எடுத்துள்ளது. அதேபோல், Wow! Momo நிறுவனம் தனது ஊழியர்களின் குடும்பங்களுக்கு வாழ்நாள் முழுவதும் சம்பளம் மற்றும் குழந்தைகளின் கல்விக்கான ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது.


