தமிழ்நாடு சட்டமன்றத்திற்கானத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. ஏப்ரல் 23ஆம் நாள் வாக்குப்பதிவு, மே 4ஆம் நாள் வாக்கு எண்ணிக்கை என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மார்ச் 15 மாலையில் அறிவித்தபோது, அரசியல் கட்சியினரின் பல நாள் எதிர்பார்ப்பு தீர்ந்தது. காரணம், கடந்த சில தேர்தல்களாக பிப்ரவரி மாதத்திலேயே தேர்தல் நாள் எப்போது என்று அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துவிடும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, முதல் கட்டத்தில் தேர்தல் நடைபெற்று, பிற மாநிலங்களில் ஆறேழு கட்டங்கள் முடிகின்ற வரை காத்திருந்து, அதன்பிறகு தேர்தல் முடிவுகளைத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கும். அதுவரை, மின்னணு வாக்குப் பெட்டியை காவல் காக்க வேண்டிய பொறுப்பும் அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கு உண்டு.

அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகியவற்றுக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மொத்த தேர்தலும் இரண்டே கட்டங்களில் நடைபெறுகிறது. அதிலும், மேற்கு வங்கத்திற்கு மட்டும்தான் இரண்டு கட்ட தேர்தல். தமிழ்நாடு உள்பட அனைத்திற்கும் ஒரே கட்டத் தேர்தல். இதில், அசாம், கேரளா, புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு ஏப்ரல் 9 அன்று ஒரே கட்டத்தில் தேர்தல் நடைபெறுகிறது. வழக்கமாக, தமிழ்நாட்டுக்கு ஏப்ரல் 23ஆம் நாள் தேர்தல் வாக்குப்பதிவு. அதிலிருந்து 11 நாட்கள் கழித்து வாக்கு எண்ணிக்கை. முந்தைய தேர்தல்களில் 20 நாட்களுக்கு மேலாகவும், கிட்டத்தட்ட ஒரு மாத காலம் அளவிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் இரவு-பகலாக கட்சி நிர்வாகிகள் காவல் இருப்பார்கள்.
மின்னணு வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமிற்குள் மர்ம நபர்கள் நுழைந்ததாக சி.சி.டி.வி கேமரா காட்சிகள் வெளியாகும். இ.வி.எம். மோசடி என்பது ஒவ்வொரு தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும் பெரும் சர்ச்சையை உருவாக்கும். இந்த முறை அதற்கான கால அளவு பெருமளவு குறைந்துள்ள நிலையில், முன்பைவிட கவனமாக வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள பகுதியை கண்காணிக்க முடியும். அவர்களின் பதற்றமும் பாதிக்கு மேல் குறைந்துவிடும்.
பொதுவாக, தமிழ்நாட்டிற்கும் புதுச்சேரிக்கும் ஒரே நாளில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்துவது வழக்கம். இந்த முறை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு என்றாலும் இரண்டும் ஒரே நாளில் நடைபெறவில்லை. ஏப்ரல் 9ஆம் நாளே புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்துவிடுகிறது. அப்போதுதான் தமிழ்நாட்டில் வேட்புமனு பரிசீலனையே நிறைவடைகிறது. தேர்தல் ஆணையம் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் கட்டுப்பட்டு செயல்படுவதில்லை என்று சொல்லப்பட்டாலும், தாடிக்கு ஒரு சீயக்காய்-தலைக்கு ஒரு சீயக்காய் என்பதுபோல, தமிழ்நாட்டிற்கு ஒரு நாளிலும், புதுச்சேரிக்கு இன்னொரு நாளிலும் தேர்தல் நடத்துவதற்கான பின்னணியில் அரசியல் காரணங்கள் இல்லாமல் இல்லை.
மிகக் குறைந்த பரப்பளவும் வாக்காளர்கள் எண்ணிக்கையும் கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 30 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அங்கு ஆளுங்கட்சியான என்.ஆர்.காங்கிரசுக்கும், அந்தக் கூட்டணியை வழிநடத்தும் பா.ஜ.க.வுக்கும் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுவிட்டது. ஆனால், எதிர்த்தரப்பில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி இன்னும் முடிவாகவில்லை. எதிர்த்தரப்புக்கு இந்த முறை வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதால், அதிக சீட் காங்கிரசுக்கா-தி.மு.க.வுக்கா என்ற போட்டியும், முதலமைச்சர் வேட்பாளர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்று முடிவாகததும் அந்தக் கூட்டணியில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதை சாதகமாக்கிக்கொள்ள பா.ஜ.க.-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி விரும்புகிறது. அதற்கற்றார்போல புதுச்சேரிக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 9ஆம் நாளே நடைபெறுகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தி.மு.க. கூட்டணி வலிமையாக உள்ளது. தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டு, சீட் எண்ணிக்கையில் முன்பின் இருந்தாலும் தலைவர்களிடையே இணக்கமான போக்கு உள்ளது. அ.தி.மு.க.வை உள்ளடக்கிய பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணியின் நிலை இப்போதைக்கு வலிமையாக இல்லை. த.வெ.க. தலைவர் விஜய்யை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வர பா.ஜ.க பகீரதப் பிரயத்தனத்தை செய்து வருகிறது. அ.தி.மு.க.வுக்கோ தன்னுடைய நிலை மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டு விடுமோ என்ற தயக்கமும் அச்சமும் உள்ளது. இதையெல்லாம் சரிசெய்து தேசிய ஜனநாயக கூட்டணியை வலிமைப்படுத்த சகல அஸ்திரங்களையும் மோடியும் அமித்ஷாவும் பயன்படுத்தி வருகின்றனர். அந்த அஸ்திரங்கள் இலக்கை அடைய வேண்டுமென்றால் கால அவகாசம் தேவைப்படுகிறது. அதனால்தான் தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு தேதி ஏப்ரல் மூன்றாவது வாரத்திற்கு சென்றுவிட்டது.
இதையெல்லாம் கடந்து தேர்தல் எனும் ஜனநாயகத் திருவிழா தொடங்கிவிட்டன. களத்தில் கட்சிகள் ரெடியாகிவிட்டன. இனி அனல் பறக்கும். சூரியன் செம்மையாக வீசும் அக்னி நட்சத்திரம் தொடங்கும் மே 4-ல் தேர்தல் முடிவுகள் தெரியும்.(Online Tamil News)



