2026 சட்டமன்றத் தேர்தலில் சமூக வலைத்தளங்களில் அதிகம் புழங்கிய வார்த்தை, ‘தற்குறி’. ஒரு குறிப்பிட்ட கட்சியின் ஆதரவாளர்களின் தொடர் செயல்பாடுகள், தேர்தல் அரசியலுக்கு முற்றிலும் மாறுபாடாக இருந்ததுடன், தேர்தல் நடத்தை விதிகள் என்றாலே என்ன என்று தெரியாத வகையிலும், எஸ்.ஐ.ஆர். (SIR)நடவடிக்கையால் தங்களுடைய வாக்குரிமை பாதுகாக்கப்பட்டதா என்பதைக் கூட தெரிந்துகொள்ளாமலும், மத்திய அரசின் அதிகாரங்கள் என்ன, மாநில அரசின் அதிகாரங்கள் என்ன என்ற தெளிவில்லாமலும் அந்தக் கட்சியின் ஆதரவாளர்கள் மட்டுமின்றி, கட்சியின் தலைவரே பேச்சும் அறிக்கைகளுமே அதே லெவலில் இருந்ததால், ஒட்டுமொத்தமாக அந்தக் கட்சியினரை விமர்சிக்க ‘தற்குறி’ என்ற சொல் சமூக வலைத்தளங்களில் பயன்படுத்தப்பட்டது.
ஒரு தரப்பினரை மட்டும் அப்படிச் சொல்லலாமா? மற்ற கட்சியினர் எல்லாம் அறிவாளிகளா? என்ற கேள்வியுடன், குறிப்பிட்ட கட்சியினரைத் தற்குறிகள் என்று சொன்னால், நானும் தற்குறிதான் என்று குறுக்கே வந்து விழுந்த தற்குறிகளையும் இந்த முறை காண முடிந்தது. குறிப்பிட்ட அந்தக் கட்சியை ஆதரிக்கிறேன் என்பதால் என்னையும் தற்குறி என்கிறார்கள் என்று கதறிய மேதாவிகளையும் தேர்தல் களம் பார்த்தது. படித்தவர்கள், உயர்ந்த வேலைகளில் இருப்பவர்கள், பாமரர்கள் என்று எல்லா நிலைகளிலும் தற்குறிகள் தங்களை வெளிப்படுத்திக் கொண்டதைக் கண் கூடாகப் பார்க்க முடிந்தது.
உண்மைகளையும் நடைமுறைகளையும் அறியாமல் தனக்குத் தெரிந்தது மட்டுமே உண்மை என்று நம்பி, அதன்படி செயல்படுகிறவர்கள்தான் ‘தற்குறி’கள் எனப்படுகிறார்கள். எல்லாருக்கும் எல்லாமும் தெரிந்துவிடாது. தங்களுக்குத் தெரியாதவற்றைப் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்பவர்கள் அறிவை வளர்த்துக் கொள்கிறார்கள். தனக்குத் தெரிந்தது மட்டுமே உலகளாவிய உண்மை என்று நினைத்து வாழ்பவர்கள் தற்குறியாகி விடுகிறார்கள். இதில் நகைமுரண் என்னவென்றால், அறிவுப்பூர்வமாக சிந்தித்து உருவாக்கப்பட்டவை ஸ்மார்ட் போன்கள். ஆனால், அதன் மூலமாக கிடைக்கக்கூடிய வசதிகளான வாட்ஸ்ஆப், சோஷியல் மீடியா பதிவுகள், பலதரப்பட்ட வீடியோக்கள் இவை மட்டுமே முழுமையான உலகம் என நம்பி வாழ்கின்ற தற்குறிகளை எல்லாப் பகுதிகளிலும் காண முடியும்.
தமிழ்நாட்டின் அரசியலைப் பொறுத்தவரை, சினிமாவின் பங்கு தவிர்க்க முடியாதது. அரசியல் தலைவர்களுக்கு சினிமா நடிகர்-நடிகைகள் பிரச்சாரம் செய்வது வழக்கம். சினிமா கலைஞர்களுக்கு கூட்டம் கூடுவதும் அதிகமாக இருக்கும். காரணம், தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையில் சினிமாதான் ஆக்கிரமித்திருக்கிறது. முன்பு திரையரங்குக்கு சென்று சினிமா பார்க்க வேண்டியிருந்தது. தற்போது வீட்டுக் கூடத்திற்கே சினிமா வந்துவிட்டது.
இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக என்ற முன்னறிவிப்புடன், குறிப்பிட்ட நடிகரின் திரைப்படத்தை விடுமுறை நாட்களில் தொடர்ந்து வெளியிடும்போது, வீட்டுக் கூடத்தில் உட்கார்ந்திருக்கும் குடும்பத்தினர் அத்தனை பேரும் ஈர்க்கப்படுகிறார்கள். நடிகரின் ரசிகர்களாகிறார்கள். திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்தவர்கள், சின்னத்திரை தொடர்களில் நல்ல வாய்ப்புகளைப் பெறுகிறார்கள். அந்தப் படத்தில நடிச்ச நடிகர்தானே, நடிகைதானே என்று வீட்டுக்கூடத்தில் உட்கார்ந்திருக்கும் ரசிகர்கள் அடையாளம் கண்டு ரசிக்கிறார்கள். காலை 11 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை சின்னத்திரைத் தொடர்களுக்கு ஓய்வில்லை.
குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் டி.வி. பார்த்துக்கொண்டே இருக்க, இளம் வயதினர் மொபைல் போனில் தங்களுக்கான விர்ச்சுவல் உலகத்தில் வாழ்க்கிறார்கள். இரு தரப்பினரின் பெரும்பாலான நேரங்கள் சினிமாக்காரர்கள் தொடர்புடையதாகவே உள்ளது. இந்தியாவுக்கே வழிகாட்டிய தமிழ்நாட்டின் சமூக நீதி அரசியல், கல்வியில் ஏற்பட்ட மாற்றம், டி.வி.யும் மொபைலுமாக இருக்கும் குடும்பங்களில் ஏற்பட்டுள்ள சமூக-பொருளாதார வளர்ச்சி இவை போன்ற எதுவும் அந்தக் குடும்பத்தினருக்கே தெரியாது. தப்பித் தவறிக்கூட அரசியல் பேசும் வாய்ப்பு குடும்ப உறுப்பினர்களுக்கிடையே கிடையாது.
அரசியல் (Politics) என்பது மோசமானது என்றும், அரசியல் தலைவர்கள் நாட்டை சீரழிப்பவர்கள் என்றும் அதே சினிமா ஹீரோ நடிக்கும் படம் ரசிகர்களால் அதிகளவில் பார்க்கப்படும். உள்ளங்கையளவு கைப்பேசித் திரை, டி.வி.யின் சின்னத்திரை, தியேட்டர்களில் உள்ள பெரியதிரை இவற்றைத் தவிர வேறு எதிலும் கவனம் திரும்பாத-கவனம் செலுத்த விரும்பாத தலைமுறையினர், சினிமா ஹீரோ அல்லது ஹீரோயின் பேசும் பஞ்ச் டயலாக்குகளை அப்படியே நம்புகிறார்கள்.
பொதுவாழ்க்கை அனுபவமோ, அரசியல் கட்சிக்கான கட்டமைப்போ இல்லாத ஹீரோ புதுக்கட்சி தொடங்கினால், சமூக வலைத்தளங்கள் மூலமாகவே அதற்கான ஆதரவைத் திரட்ட முடிகிறது. கடந்த 20 ஆண்டுகளாக வீட்டுக்கூடத்திலும், மொபைல் போன் திரைகளிலும் மூழ்கிக் கிடந்தவர்கள் தேர்தல் நேரத்தில் தற்குறிகளாக வெளிப்பட்டிருக்கிறார்கள். தற்குறிகளின் எண்ணிக்கையைக் கண்டு மிரளாமல், தற்குறிகளாக அவர்கள் உருவானதற்கானக் காரணங்களையும், அதற்கு காரணமானவர்களையும் புரிந்துகொண்டால்தான் உண்மையான நல்ல மாற்றத்தை உருவாக்க முடியும்.



