கடந்த 2020-ம் ஆண்டு டெல்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராக நடந்த போராட்டத்தின் போது பெரும் கலவரம் வெடித்தது. இந்தச் சூழலில், 23 வயதான பைசான் என்ற இளைஞர் போலீசாரால் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த விவகாரம் இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தற்போது சிபிஐ (CBI) விசாரணையைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. (muslim man forced to singh national anthem)
வீடியோவும், கொடூரத் தாக்குதலும்
சமூக வலைதளங்களில் அச்சமயத்தில் வைரலான ஒரு வீடியோ இந்த வழக்கின் மையப்புள்ளியாக உள்ளது. அதில், சாலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடக்கும் ஐந்து இளைஞர்களைச் சுற்றி நின்றுகொண்டு, சீருடை அணிந்த காவலர்கள் லத்திகளால் தாக்குகின்றனர். அந்த நிலையிலும் அந்த இளைஞர்களை “தேசிய கீதம்” மற்றும் “வந்தே மாதரம்” பாடுமாறு காவலர்கள் கட்டாயப்படுத்துகின்றனர். அந்த வீடியோவில் ஒரு காவலர், “நல்லா பாடுங்கடா” என்று கேலி செய்தபடி பூட்ஸ் கால்களால் மிதிப்பதும் பதிவாகியிருந்தது.இது சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
பைசானின் மரணம் மற்றும் சட்டப் போராட்டம்
இந்தத் தாக்குதலுக்கு ஆளானவர்களில் ஒருவரான பைசான், அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டு ஜியோதி நகர் காவல் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டார். அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தும், அவருக்கு உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று அவரது தாயார் கிசுமத்துன் (Kismatun) குற்றம் சாட்டினார். இதனைத்தொடர்ந்து,காவல் நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பைசான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, தனது மகனின் மரணத்திற்குப் பின்னால் இருக்கும் போலீசாரைக் கண்டறிய வேண்டும் என்று அவரது தாயார் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.(Online Tamil News)
சிபிஐ விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டதற்கான பின்னணி
இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக ஆரம்பத்தில் டெல்லி காவல்துறையின் கீழ் இயங்கும் குற்றப்பிரிவுதான் விசாரணையை மேற்கொண்டது. ஆனால், மிகத்தெளிவான வீடியோ ஆதாரங்கள் இருந்தபோதிலும், நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகக் குற்றவாளிகளைக் கண்டறிவதில் காவல்துறை தரப்பில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனைத்தொடர்ந்து, வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், காவல்துறையின் மெத்தனப்போக்கைக் கண்டு கடும் அதிருப்தி அடைந்தது.
ஒரு சாமானிய மனிதன், சட்டத்தையும் மக்களையும் பாதுகாக்க வேண்டிய அரசு இயந்திரத்தின் கைகளாலேயே அடித்துக் கொல்லப்பட்டிருப்பது ஜனநாயகத்திற்கே ஆபத்தானது என்று நீதிமன்றம் சாடியது. மேலும், காயமடைந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இளைஞர்களை வலுக்கட்டாயமாகத் தேசிய கீதம் பாடச் சொல்லித் துன்புறுத்தியது, இது ஒரு தனிப்பட்ட தாக்குதல் மட்டுமல்லாமல், ஒரு குறிப்பிட்ட மத அடையாளத்திற்கு எதிராக நடத்தப்பட்ட “வெறுப்பு குற்றம்” (Hate Crime) என்பதையும் நீதிமன்றம் அழுத்தமாகப் பதிவு செய்தது. டெல்லி காவல்துறை தனது சக ஊழியர்களைக் காப்பாற்ற முயல்வதாகக் கருதிய நீதிமன்றம், இந்த வழக்கில் வெளிப்படையான நீதியை உறுதி செய்ய 2024 ஜூலை மாதம் விசாரணையை உடனடியாக சிபிஐ-க்கு (CBI) மாற்றி அதிரடி உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் தற்போதைய நடவடிக்கை
சிபிஐ (CBI) தனது விரிவான விசாரணையை முடித்து, டெல்லி காவல்துறையைச் சேர்ந்த ஹெட் கான்ஸ்டபிள் ரவீந்தர் குமார் மற்றும் கான்ஸ்டபிள் பவன் யாதவ் ஆகிய இருவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அந்த வீடியோவில் உள்ள காவலர்களின் முகங்களை நவீன தொழில்நுட்பம் மூலம் அடையாளம் கண்டு சிபிஐ உறுதி செய்தது.
இதனை ஏற்றுக்கொண்ட ரவுஸ் அவென்யூ நீதிமன்ற நீதிபதி மயங்க் கோயல், அந்த இரு காவலர்களுக்கும் சம்மன் அனுப்பியுள்ளார். அவர்கள் மீது குற்றச் சதி (Criminal Conspiracy) மற்றும் கொலைக்கு நிகரில்லாத மரணம் விளைவித்தல் (Culpable Homicide not amounting to murder) போன்ற கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடர நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த வழக்கு வரும் பிப்ரவரி 24, 2026 அன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.


