காஞ்சிபுரத்தில் நடந்த பிரச்சாரத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை பதவி வெறி அடங்காதவர் என்று கடுமையாக விமர்சித்தார்.
முன்னாள் அதிமுக எம்.பி. கே.சி.பழனிசாமி இதை கண்டித்துள்ளார்.
அவர், ‘’ பதவி வெறி அடங்காதவர் பன்னீர்செல்வம் என்று விமர்சனம் செய்திருக்கிறார். பன்னீர்செல்வம் செய்தது தவறு தான், ஆனால் எந்த விதத்திலும் எடப்பாடி பழனிசாமி உத்தமர் அல்ல. தனக்கு உட்கட்சியில் உள்ள போட்டியாளர்களை எப்படியாவது அப்புறப்படுத்த வேண்டும், அவர்களை மாற்று முகாமுக்கு அனுப்ப வேண்டும் என்று முனைப்போடு செயல்பட்டதே இந்த எட்டப்பன் எடப்பாடி தான்.

இன்று வரை கட்சியில் இருந்து நீக்கப்பட்டு 9 ஆண்டுகள் ஆகியும், 6 மாதத்திற்கு ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் எடப்பாடி பழனிசாமி என்கிற தனிமனிதரை தவிர கட்சியில் இருக்கிற அடிமட்ட உறுப்பினர்களும், முக்கிய தலைவர்களும் என்னுடைய நீக்கம் ரத்து செய்யப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தியும், எந்த கட்சிக்கும் செல்லாத, கட்சிக்கு எதிராக எந்த துரோகத்தையும் செய்யாத எனக்கு எடப்பாடி செய்வது மாபெரும் துரோகம் அல்லவா?
இந்த சர்வாதிகாரி தன்னுடைய போட்டியாளர்கள் உயிருடனே வாழக்கூடாது என்று நினைக்கிற அளவுக்கு மிக்க நல்லவராக இருக்கிறார். அதிமுக என்கிற ஆலமரத்தை சிதைத்த பெருமை இவரையே சாரும். இந்த முறை அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தா விட்டால், அடிமட்ட தொண்டர்கள் இவரை அடித்து விரட்டக்கூடிய நாட்கள் வெகு தொலைவில் இல்லை.’’



