கேரள மாநிலத்தின் பெயரை மலையாள மொழியில் அழைக்கப்படுவது போலவே அதிகாரப்பூர்வமாக “கேரளம்“ என மாற்றுவதற்கான முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.

மலையாள மொழியில் இந்த மாநிலம் கேரளம் என்றே பல நூற்றாண்டுகளாக அழைக்கப்பட்டு வந்தாலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் அட்டவணையில் ஆங்கிலத்தில் “Kerala” என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையை மாற்றி, மாநிலத்தின் மொழியியல் மற்றும் கலாச்சார அடையாளத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற நோக்கில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு நீண்டகாலமாகப் போராடி வந்தது.

இதற்காக கேரள சட்டப்பேரவையில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக 2023-ல் ஒரு தீர்மானம் அனுப்பப்பட்டபோது, அதில் இருந்த சில தொழில்நுட்பக் கோளாறுகளைச் சுட்டிக்காட்டி மத்திய உள்துறை அமைச்சகம் அதைத் திருப்பி அனுப்பியது. இதையடுத்து மீண்டும் திருத்தப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட நிலையில், தற்போது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இதற்குப் பச்சைக்கொடி காட்டியுள்ளது.
மத்திய அமைச்சரவையின் இந்த ஒப்புதலைத் தொடர்ந்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 3-வது பிரிவின் கீழ் பெயர் மாற்றத்திற்கான சட்ட நடைமுறைகள் விரைவில் நாடாளுமன்றத்தில் தொடங்கப்பட உள்ளன. குடியரசுத் தலைவரின் பரிந்துரையின் பேரில், நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின்னர், அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் இனி வரும் காலங்களில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் அனைத்து அதிகாரப்பூர்வ ஆவணங்களிலும் ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் “கேரளம்” என்ற பெயரே இடம்பெறும்.(Online Tamil News)


