மத்திய பா.ஜ.க. அரசில் ஊழலே இல்லை என்பார்கள் பிரதமரும் மற்ற அமைச்சர்களும். ஆனால், பி.எம்.கேர் உள்ளிட்ட நிதி பற்றிய கேள்வி கேட்டால் ஒரு பதிலும் வராது. ரஃபேல் விமானம் தொடர்பான ஊழல் வெளியானால், கொஞ்ச நாளில் அது சம்பந்தமான ஃபைல்கள் காணாமல் போய்விடும். தேசிய நெடுஞ்சாலைகள், பாலங்கள் தொடர்பான ஊழல்களும், அந்த ஊழலால் பாலங்களும் சாலைகளும் சிதைந்து போனதும் அப்பட்டமாக வெளியே வந்தாலும் பதிலே சொல்ல மாட்டார்கள். மாறாக, பா.ஜ.க. அல்லாத மற்ற கட்சிகளின் மாநில அரசுகள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, தன்னுடைய பரிவாரங்களான அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சி.பி.ஐ. ஆகியவற்றை ஏவிவிடுவார்கள். லேட்டஸ்டாக இதில் இறக்கப்பட்டிருப்பது, என்.ஐ.ஏ. அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு பா.ஜ.க அரசு வெட்கமோ கூச்சமோ படவேபடாது.
காங்கிரசும் மாநிலக் கட்சிகளும் ஆட்சியிலிருந்த மாநிலங்களில் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி தன்னுடைய நேரடி ஆட்சியையோ, கூட்டணி ஆட்சியையோ அமைத்து வந்த பா.ஜ.க. இப்போது எம்.பி.க்களையும் விலைக்கு வாங்கும் வேலையை வாங்கத் தொடங்கியிருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி.க்கள் ஒரே நாளில் பா.ஜ.க. பக்கம் தாவியிருக்கிறார்கள். ஒரு கட்சியின் சார்பில் எம்.எல்.ஏ அல்லது எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வேறு கட்சிக்குத் தாவினால் அவர்களின் பதவி பறிக்கப்படும் என்கிற அரசியல் சட்டத் திருத்தம் 1984-89ல் ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்திலேயே கொண்டு வரப்பட்டுவிட்டது. எனினும், ஒரு கட்சியின் மொத்த எம்.எல்.ஏக்கள் அல்லது எம்.பி.க்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் மொத்தமாக வேறு கட்சிக்குத் தாவினால் அது கட்சித்தாவல் சட்டத்தின் கீழ் வராது. அவர்கள் வேறொரு கட்சியில் ஒன்றாகப் போய்ச் சேர முடியும்.
7 எம்.பி.க்கள் என்பது ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி.க்களில் 3-ல் 2 பங்கு அளவாகும். இவர்களில் 6 பேர் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்யும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். பஞ்சாபில் பா.ஜ.க.வுக்கு எந்த செல்வாக்கும் கிடையாது. முன்பு, அகாலிதளமும் காங்கிரஸ் கட்சியும் மாறி மாறி ஆட்சி செய்திருக்கின்றன. இப்போது அங்கே ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்கிறது. மாநில ஆளுங்கட்சியின் எம்.பி.க்கள் எண்ணிக்கைக்கேற்ப ராஜ்யசபா எம்.பி.க்களின் எண்ணிக்கை உயரும். பஞ்சாபின் ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்கள் எண்ணிக்கை 6 என்பதால், கூடுதலாக அந்தக் கட்சியின் மற்றொரு ராஜ்யசபா எம்.பி.யையும் சேர்த்து வெட்கமேயில்லாமல் தன் வசமாக்கியிருக்கிறது யோக்கிய வேடம் போடும் பா.ஜ.க.
ராகவ் சத்தா என்பவர்தான் மற்ற 6 எம்.பி.க்களையும் பா.ஜ.க. பக்கம் கொண்டு போய் சேர்த்திருக்கிறார். பா.ஜ.க தரப்பிலிருந்து அவர் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு, அழுத்தம் தரப்பட்ட நிலையில் இந்த கட்சித்தாவல் நடந்துள்ளது. ஆம் ஆத்மி கூடாரம் காலியாகிவிட்டதாக பா.ஜ.க. கொண்டாடிக் கொண்டிருக்கிறது. பா.ஜ.க.வின் மிரட்டலும், எம்.பி.க்கள் கட்சித் தாவலும் ஜனநாயக விரோதம் என்று ஆம் ஆத்மியும் எதிர்க்கட்சியினரும் விமர்சனம் செய்கின்றன.
ராஜ்யசபா எனும் மாநிலங்களவையின் தலைவராக இருப்பவர் குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன். அவருக்கு ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் சிங் கடிதம் அனுப்பியிருக்கிறார். கட்சித் தாவிய 7 எம்.பி.க்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பதுதான் சஞ்சய் சிங் கடிதத்தில் உள்ள கோரிக்கையாகும். பஞ்சாப் மக்கள் தேர்ந்தெடுத்த ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் மூலமாகத்தான் இவர்கள் ராஜ்யசபா எம்.பியானார்கள். ஆம் ஆத்மி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு பா.ஜ.க.வுக்கு மாறுவது என்பது பஞ்சாப் மக்களுக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும் செய்திருக்கக்கூடிய துரோகமாகும். எனவே அவர்கள் எம்.பி. பதவியில் தொடர்ந்து நீடிக்க குடியரசு துணைத் தலைவர் அனுமதிக்கக்கூடாது. கட்சித்தாவல் தொடர்பான நடவடிக்கையில் அவர்களின் முதன்மைக் கட்சியை இணைக்காமல் தன்னிச்சையாக முடிவெடுக்கக்கூடாது என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், மக்களவை சபாநாயகர், தலைமைத் தேர்தல் ஆணையர் உள்ளிட்ட அத்தனை பேரும் நேரடிக் கட்சிக்காரர்கள் போலவே செயல்படுபவதையும் செயல்பட வைக்கப்படுபவதையும் தொடர்ந்து பார்க்க முடிகிறது. 7 எம்.பிக்கள் கட்சித் தாவிய விவகாரத்தில் குடியரசு துணைத் தலைவர் என்ன நடவடிக்கை எடுக்கிறார் என்பதைப் பொறுத்து, பா.ஜ.க.வின் பர்சேஸ் பாலிடிக்ஸ் அம்பலமாகும்.(Online Tamil News)



