தொடர்ந்து இரண்டாவது நிதியாண்டாக தமிழ்நாடு இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியைப் பெற்றிருப்பதை மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்டங்கள் செயலாக்கத்துறை உறுதி செய்துள்ளது. 2025 நிதியாண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11.19%ஆக இருந்தது. 2026 நிதியாண்டில் இந்த வளர்ச்சி 10.83% என்ற அளவில் மீண்டும் இரட்டை இலக்க அளவில் உள்ளது.
2025ஆம் ஆண்டில் இந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாடுதான் இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியை அடைந்த ஒரே மாநிலமாகும். அந்த வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் வகையில், இந்த ஆண்டும் அதே இரட்டை இலக்க வளர்ச்சியைப் பெற்றிருப்பது என்பது தமிழ்நாட்டின் பொருளாதார நிலைத்தன்மைக்கு சான்றாக உள்ளது. இந்தியாவின் தேசிய சராசரி பொருளாதார வளர்ச்சி என்பது 7.4% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது மிகுந்த கவனத்திற்குரியதாகும்.
ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி ஆட்சியின்போது தமிழ்நாடு இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது. அதன்பிறகு, அந்த வளர்ச்சியைப் பெற முடியவில்லை. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியில் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் பலவித தேக்கங்கள் ஏற்பட்டன. கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு இது மேலும் சரிந்த நிலையில், 2021ல் தி.மு.க. ஆட்சி அமைந்தது.
தொழில்துறை, உற்பத்தி, சேவைத்துறை எனப் பல நிலைகளிலும் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும் செயல்திட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதற்காக உலகளாவிய பொருளாதார வல்லுநர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு, ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற இலக்குடன் பொருளாதார மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈரப்பத்தில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முனைப்புடன் செயல்பட்டார்.

தமிழ்நாட்டில் பரவலான அளவில் பெரிய தொழில் நிறுவனங்கள் அமைந்தன. வேலைவாய்ப்புகள் உருவாகின. இந்தியாவில் உள்ள பெண் பணியாளர்களில் 41% அளவுக்கு தமிழ்நாட்டில் உள்ளனர் என மத்திய அரசு அறிவிக்கும் அளவுக்கு பரவலான வளர்ச்சி உருவானது. சரியாகத் திட்டமிடலும், அதனை முறையாக செயல்படுத்துதலும், உற்பத்தித் துறையில் மறுமலர்ச்சியும், அதற்கேற்ற உள்கட்டமைப்பு வசதிகளும் மிகச் சிறப்பாக அமைந்ததே இந்தப் பொருளாதார வளர்ச்சிக்கு காரணம் என்று பொருளாதார ஆய்வாளர் கே.ஆர்.சண்முகம் தெரிவித்துள்ளார்.
மாநில அரசின் திட்டக்குழுவின் பங்கு தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியமானதாகும். தமிழ்நாட்டில் எந்தெந்த வகை தொழில்கள் சிறப்பாக அமையும், அதற்கேற்ற மனித ஆற்றல் எந்தெந்த பகுதிகளில் கிடைக்கும் என்பதை அறிவியல்பூர்வமான ஆய்வின் மூலம் திட்டக்குழுவினர் கண்டறிந்ததுடன், மத்திய அரசைப் போல மாநில அரசின் சார்பிலும் தெளிவான பொருளாதார ஆய்வறிக்கையையும் வழங்கினர். இதன் மூலம் எந்தெந்த துறைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப செயல்பட்டது மாநில அரசு.
தமிழ்நாட்டில் இரண்டாம் நிலை நகரங்களில் டைடல் பார்க்குகள், அதிக தொழில் வளர்ச்சி இல்லாத மாநிலங்களில் தோல் அல்லாத காலணி தொழிற்சாலைகள், சிறந்த கட்டமைப்பு கொண்ட பகுதிகளில் மின்வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவை உருவாக்கப்பட்டதுடன், தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அந்தந்த தொழிற்சாலைக்கு ஏற்ற திறன் பயிற்சி கொண்ட மனித ஆற்றலும் வழங்கப்படுகிறது.
இன்று இந்திய அளவில் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாகத் தமிழ்நாடு உயர்ந்திருப்பதற்கு கடந்த 5 ஆண்டுகளாக சராசரியாக 9.07% என்கிற சீரான வளர்ச்சியே காரணமாகும். மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்தி நல்ல முறையில் இருப்பதுடன், தனிமனித வருமான அளவும் 4.08 லட்ச ரூபாய் என்ற அளவில் உயர்ந்துள்ளது. இதுவும் இந்திய அளவில் இரண்டாவது இடமாகும். கர்நாடக மாநிலத்தில் இது 4.33 லட்ச ரூபாயாக உள்ளது.
தொடர்ச்சியாக இரண்டாண்டுகள் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி என்பதுடன், இது தொழில்துறை சார்ந்ததாக மட்டுமின்றி, வேளாண்துறையையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. 2023-24, 2023-25 ஆகிய ஆண்டுகளில் பின்னடைவாக இருந்த தமிழ்நாட்டின் வேளாண்துறை தற்போது 9% வளர்ச்சி அடைந்திருப்பதும் கவனிக்கத்தக்கதாகும். உணவு தானியங்கள் உற்பத்தி வளர்ந்திருப்பதும், வேளாண் விளை பொருட்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்வதற்கான முயற்சிகளும் இந்த வளர்ச்சிக்கு காரணமாகும்.
மாநிலத்தில் வன்முறை, கலவரம் இவை இல்லாத நிலையில்தான், முதலீடுகள் குவியும். தொழிற்சாலைகள் உருவாகி, வேலைவாய்ப்புகளை அளிக்கும். அந்த வகையிலும் தமிழ்நாடு அமைதி நிறைந்த மாநிலமாகத் திகழ்கிறது. தமிழ்நாடு வளரும். தமிழ்நாடு வெல்லும்.(Online Tamil News)



