தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. 22 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் கொடிகட்டி பறந்து வரும் இவர் குறித்து சமீபகாலமாக சர்ச்சைகள் அதிகரித்துள்ளன.

திரிஷாவின் தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமின்றி, அவரது திரையுலக வாழ்க்கை குறித்தும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பரபரப்பு கிளம்பி வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் தவெக தலைவரும், நடிகருமான விஜய்யுடன் அவர் ஒரு திருமண நிகழ்வுக்கு ஒன்றாகச் சென்றது சினிமா வட்டாரத்திலும், பொதுவெளியிலும் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

மேலும், சமீபகாலமாக நடிகை திரிஷா சினிமாவை விட்டு விலகப்போவதாகவும், ஒரு பணக்கார தொழிலதிபரை ரகசியமாகத் திருமணம் செய்யப்போவதாகவும் சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவின. அவர் புதிய படங்கள் எதிலும் ஒப்பந்தமாகவில்லை என்ற தகவலை முன்வைத்து இத்தகைய செய்திகள் பகிரப்பட்டு வந்தன. இந்த வதந்திகளுக்கு மிகவும் கிண்டலான முறையில் பதிலடி கொடுத்துள்ள திரிஷா, தான் ஏற்கனவே சினிமாவை விட்டு விலகிவிட்டதாகவும், ஒரு தொழிலதிபரைத் திருமணம் செய்து தனக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்து அவர்களுக்கு நேற்றுதான் இரண்டு வயது முடிந்தது என்றும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இவ்வளவு தானா அல்லது இன்றைய கற்பனை கதைகளுக்கான கோட்டா முடிந்துவிட்டதா என்று காட்டமாகக் கேட்டுள்ள அவர், இதன் மூலம் தன் மீதான திருமண மற்றும் சினிமா விலகல் புகார்கள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.(Online Tamil News)


