காசா போரில் பெண்கள் மற்றும் சிறுமிகள் சந்தித்து வரும் பாதிப்புகள் குறித்து ஐக்கிய நாடுகள் அவை (UN Women) கவலை அளிக்கும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அக்டோபர் 2023 முதல் டிசம்பர் 2025 வரையிலான காலக்கட்டத்தில், போரின் விளைவாக நாளொன்றுக்குச் சராசரியாக 47 பெண்கள் மற்றும் சிறுமிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக 22,000 பெண்கள் மற்றும் 16,000 சிறுமிகள் என 38,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 11,000 பெண்கள் கடுமையான காயங்களுடன் வாழ்நாள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

போர்நிறுத்த அறிவிப்புகளுக்குப் பிறகும் கடந்த ஆறு மாதங்களாக உயிரிழப்புகள் நீடித்து வருவதுடன், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள உடல்களையும் கணக்கிட்டால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

கணவன்மார்களை இழந்த பல்லாயிரக்கணக்கான பெண்கள் குடும்ப பாரத்தைச் சுமக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். உணவு, குடிநீர் மற்றும் மகப்பேறு கால மருத்துவ வசதிகள் இன்றி சுமார் 5,00,000 பெண்கள் கடும் மனிதாபிமான நெருக்கடியில் தவித்து வருவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.(Online Tamil News)


