மதுரை மத்தி தொகுதியில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து என்.டி.ஏ. கூட்டணி சார்பில் சுந்தர் சி போட்டியிடுகிறார்.
பிடிஆர் – சுந்தர் சி இருவரும் ஒருவரை ஒருவர் பிரச்சாரத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதில் பிடிஆருக்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ்ராஜ் பிரச்சாரம் செய்து வருகிறார். ‘’மூன்று நாளுக்கு முன்னாடி வரைக்கும் ஷீட்டிங்கில் இருந்தாருங்க அவரு. முணு நாளுக்கு முன்னாடி வரைக்கும் ஷூட்டிங்கில் இருந்தீங்களா இல்லையா? திடீர்னு வேட்பாளர்னு அறிவிச்சதும் நீங்களே அதிர்ச்சி அடைஞ்சீங்களா இல்லையா? மூணு நாளுக்கு முன்னாடி வரைக்கும் மதுரை மக்களுக்கோ தமிழ்நாட்டுக்கோ, இந்திய அரசியலுக்கோ எந்த பிரச்சனைக்கும் நின்று பேசாம, வேட்பாளர்னு அறிவிச்சதும் ஷூட்டிங்குக்கு பேக் அப் சொல்லிவிட்டு வந்துட்டா மதுரை மக்கள் என்ன ஏமாளிகளா?

நீங்க எந்த கட்சி? புதிய நீதி கட்சின்னு ஒண்ணு இருந்துச்சு. அதுல நீங்க என்ன செஞ்சிருக்கீங்க? உங்க கொள்கை என்ன? பாஜக நேரா வந்தா ஜெயிக்க முடியாதுங்கிறதால புதிய நீதிக்கட்சி வழியா வருது. அதுக்கு ரெண்டு சீட் கொடுத்தாங்க. ஏன்யா டைரக்டர் ஆகுறதுக்கு எத்தன வருசம் கஷ்டப்பட்டிருப்ப.
உன் மனைவி இருக்காங்க. 10 வருசத்துல 3 கட்சி மாறிட்டாங்க. குஷ்புவுக்கு கிடைக்காத எம்.எல்.ஏ. சீட் உனக்கு எப்படி கிடைச்சதுன்னு யோசிக்க மாட்டியா?
மதுரை மக்கள பத்தி என்ன நெனச்சிக்கிட்டு இருக்கீங்க. மதுரை வந்து யாரை பேசுறீங்க? அதுவும் பிடிஆரைப் பற்றி. இன்றைக்கு பிடிஆர் பேசினால் அதை இந்தியா மொத்தமும் கவனிக்குது. அவருடைய அறிவு, அவருடைய விஷன் அப்படி.

இந்தியாவே திரும்பிப்பார்க்கும் ஒரு அரசியல்வாதி இருக்கிறார் என்றால் அது பிடிஆர். இவரால் மதுரைக்கு பெருமை. பிடிஆர் என்று சொன்னால் அவர் அமைச்சராக இருக்கிறார். இவ்வளவு செய்திருக்கிறார். உன்னுடைய ரெக்கார்டு எங்கப்பா? மாற்றம் வேண்டும்தான் அது ஏமாற்றமாக போய்விடக்கூடாது இல்லையா? இந்த சீரழிவை எப்படி ஏற்றுக்கொள்வதா? அந்த பேச்சைக் கேட்டுத்தான் நான் பிடிஆரிடம் சொன்னேன். உங்களுக்கு அந்த மாதிரியான பேச்சு எல்லாம் வராது. நான் வந்து பேசிக்கிறேன் என்று சொன்னேன்.
மக்களே, நான் கடைசியாக ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். அடிமை கும்பல் வேணுமா? சினிமா கும்பல் வேண்டுமா? திராவிட மாடல் வேணுமா?
இது திமுகவுக்கும் அதிமுகவுக்கும் நடக்கும் தேர்தல் அல்ல. விஜய் சொல்வது மாதிரி டிவிகேவுக்கும் டிஎம்கேவுக்கும் நடக்கும் தேர்தலும் அல்ல. இது ஒற்றுமைக்கும் பிரிவினைக்கும் இடையே நடக்கும் தேர்தல். மதுரை வீர மண்ணுன்னு சொல்றீங்க. அத செஞ்சி காட்டுங்க. செஞ்சி காட்டுவீங்கன்னு நம்புறேன்.’’



