சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள லியுயாங் நகரில் செயல்பட்டு வந்த பட்டாசுத் தொழிற்சாலையில் திங்கட்கிழமை மாலை 5 மணி அளவில் மிகக் கடுமையான வெடி விபத்து ஏற்பட்டது.

ஹுவாஷெங் பட்டாசுத் தயாரிப்பு மற்றும் கண்காட்சி நிறுவனத்தில் ஏற்பட்ட இந்த வெடிப்புச் சம்பவத்தில் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 61 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த இடத்திற்கு 480-க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் விரைந்து சென்று ஐந்து குழுக்களாகப் பிரிந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். குறிப்பாக அபாயகரமான பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்த மூன்று மீட்பு ரோபோக்களும் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொழிற்சாலைக்கு அருகில் கறுப்பு வெடிமருந்து சேமித்து வைக்கப்பட்டுள்ள இரண்டு பெரிய கிடங்குகள் இருப்பதால் மீண்டும் வெடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதைக் கருத்தில் கொண்டு அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோக்களில் இந்த வெடிப்பு சம்பவத்தால் பல கிலோமீட்டர் தொலைவிற்கு சொத்து சேதங்கள் ஏற்பட்டுள்ளது தெரிகிறது. சீன அவசரநிலை மேலாண்மை அமைச்சகம் இந்த விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதோடு மீட்புப் பணிகளை நேரடியாகக் கண்காணித்து வருகிறது.(Online Tamil News)


