பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக தவெக எடுத்த முன்னெடுப்புகளில் தனது எம்.எல்.ஏவை குதிரை பேரம் பேசி கடத்திவிட்டார்கள் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அந்த எம்.எல்.ஏ. காமராஜ் அப்படி எதுவும் நடைபெறவில்லை என்று பல்டி அடித்தார்.
ஆனால், சட்டப்பேரவையில் அவர் தவெக அரசாங்கத்தை புகழ்ந்து பேசி தவெகவுக்கு ஆதரவளிக்கப் போவதாக தெரிவித்தார். இதனால் அவரை அமமுகவில் இருந்து நீக்கி உள்ளார் தினகரன். அது குறித்த அவரது அறிக்கை:
’’அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காமராஜ், கட்சியின் நிலைப்பாட்டினை மீறி இன்று சட்டமன்றத்தில் தன்னிச்சையாகத் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்திருப்பது கட்சியின் குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணானது.

காமராஜின் இன்றைய செயல்பாடு, அவரின் வெற்றிக்காகப் பாடுபட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும், அவர் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும் இழைத்திருக்கும் மிகப்பெரிய துரோகம் ஆகும்.
ஆகே கழகத்தின் கொள்கை கோட்பாடுகளுக்கும் குறிக்கோள்களுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்குக் களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், காமராஜ் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.’’



