பல பிளவுகளை பார்த்த அதிமுக இப்போது மீண்டும் பிளவுபட்டு நிற்கிறது. எடப்பாடி அணி – சண்முகம் அணி என்று இரண்டு அணியாக பிளவுபட்டிருக்கிறது.
இது குறித்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், ’’தலைவர்களே, உங்கள் சண்டைகள் இப்போது எதற்காக? உங்கள் கருத்துக்களை தேவைப்படும் நேரத்தில் உரக்கச் சொல்லி இருந்தால் இன்று வெற்றிக்கனியைப் பறித்திருக்கலாம். நீங்கள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு சென்றீர்கள். அதனால் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறீர்கள். அப்போது விட்டுக் கொடுத்துவிட்டு, இப்போது ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்வதால் யாருக்கு என்ன பயன்?’’ என்று கேட்கிறார்.

அவர் மேலும், ‘’ இதனால் உயர்வும் இல்லை, விடுதலையும் இல்லை. இன்றைய அரசியல் களம் மாறிவிட்டது. நம்மை எதிர்க்கும் பிரதான கட்சிகளின் தலைவர்கள் இன்று இளைஞர்கள். இருவருக்குமே வயது 50 அளவில் தான் இருக்கும். அவர்கள் வேகத்திற்கு ஈடுகொடுக்க வேண்டுமென்றால், கழகத்தின் பொறுப்புகளை இளைஞர்களிடம் ஒப்படையுங்கள். அனுபவம் வாய்ந்த பெரியவர்கள் அவர்களுக்குச் சரியான பாதையைக் காட்டும் வழிகாட்டிகளாக மாறுங்கள். காலாவதியான உத்திகளை வைத்துக்கொண்டு நவீன அரசியலை எதிர்கொள்ள முடியாது.
கழகம் இன்னும் எதிர்க்கட்சியாகவே செயல்படத் தொடங்கவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. “இனி இவர்களை நம்பிப் பிரயோஜனம் இல்லை” என்ற விரக்தியில் தொண்டர்கள் வெளியேறத் தொடங்கிவிட்டார்கள். மாற்று முகாமிற்கு சென்றால் உள்ளாட்சித் தேர்தலில் எளிதாக வாய்ப்பு கிடைக்கும் என்று அவர்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டது கழகத்திற்கு விடுக்கப்பட்ட மிகப்பெரிய எச்சரிக்கை.

”எனக்கு மட்டும் வாய்ப்பு கிடைத்தால் போதும்” என்கிற குறுகிய மனப்பான்மை கழகத்தை அழிவுக்கே இட்டுச் செல்லும். யாரை அரவணைக்க வேண்டும், யாரைத் தள்ளி வைக்க வேண்டும் என்ற தெளிவு தலைமைக்கு வேண்டும். நீங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தால், உங்களைக் காப்பாற்ற அந்த இறைவனாலும் முடியாது.
”புரட்சித்தலைவி அம்மாவின் ஆன்மா கோபமாக இருக்கிறது, அதனால் அதிமுக வெற்றி பெறாது” என்று ஒரு சாமியார் சொன்ன வாக்கு இன்று உண்மையாகி நிற்கிறது. அம்மாவின் ஆன்மாவையும், தொண்டர்களின் மனதையும் மேலும் காயப்படுத்தாதீர்கள்.

நேரத்தை வீணடிக்காமல் களத்தில் இறங்குங்கள். பதவிக்காக மோதிக்கொள்வதை நிறுத்திவிட்டு, கொள்கைக்காகப் போராடுங்கள். இளைஞர்களின் எழுச்சியும், மூத்தவர்களின் அனுபவமும் இணைந்தால் மட்டுமே கழகம் மீண்டும் அரியணை ஏறும். இல்லையெனில், வரலாறு உங்களை ஒருபோதும் மன்னிக்காது. விழித்தெழுங்கள்! வீறு கொண்டு எழுங்கள்!
(இதையெல்லாம் நான் சொல்லக்கூடாது. காரணம் நீங்கள் எல்லாம் பெரிய அறிவாளிகள். அனுபவசாலிகள். விசுவாசிகள். இருந்தாலும் புரட்சித்தலைவியின் உப்பைத் தின்ற மனம் இவ்வாறு எழுதச் சொல்கிறது. மன்னித்து விடுங்கள்.’’



