அமெரிக்கப் பெரும் பணக்காரரும், பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கியவருமான ஜெஃப்ரி எப்ஸ்டீன், 2019-ஆம் ஆண்டு நியூயார்க் சிறையில் உயிரிழந்தது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகப் பல்வேறு தரப்பினரும் சந்தேகம் எழுப்பி வந்தனர். இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு ஆவணங்களை பகிரங்கப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, அமெரிக்க நீதிமன்றம் எப்ஸ்டீன் எழுதியதாகக் கூறப்படும் தற்கொலைக் கடிதத்தை தற்போது வெளியிட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில், தம்மீதான விசாரணைகள் குறித்து எப்ஸ்டீன் விரக்தியுடன் குறிப்பிட்டுள்ளார். “அவர்கள் என்னை மாதக்கணக்கில் விசாரித்தார்கள், ஆனால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை” என்று அவர் அதில் எழுதியுள்ளார். மேலும், தனது வாழ்வின் முடிவைத் தானே தீர்மானிப்பது ஒரு வரம் என்று குறிப்பிட்டுள்ள அவர், எதற்காகவும் அழுது புலம்பப் போவதில்லை என்றும், அதில் எந்தத் தகுதியோ சுவாரஸ்யமோ இல்லை என்றும் மிகத் தெளிவாகவும் அதே சமயம் மர்மமான முறையிலும் தனது கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்.

எப்ஸ்டீன் இறந்தபோது சிறையில் இருந்த சிசிடிவி கேமராக்கள் செயல்படாதது மற்றும் காவலர்களின் கவனக்குறைவு ஆகியவை ஏற்கனவே பல சந்தேகங்களை எழுப்பியிருந்தன. தற்போது வெளியாகியுள்ள இந்தத் தற்கொலைக் கடிதம், அவரது மரணம் குறித்த விவாதங்களை மீண்டும் ஒருமுறை சூடுபிடிக்க வைத்துள்ளது. ஏற்கனவே கடந்த சில மாதங்களாக எப்ஸ்டீன் தொடர்பான பல ரகசிய ஆவணங்கள் நீதிமன்ற உத்தரவுப்படி வெளியாகி வரும் நிலையில், இந்தப் புதிய தகவல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.(Online Tamil News)



