அதிமுகவில் இணைந்து எம்.எல்.ஏ. ஆகி இருக்கிறார் லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவி லீமா ரோஸ். இவரது மருமகன் ஆதவ் அர்ஜுன் தவெகவில் அமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார். பெரும்பான்மையை நிரூபிக்க அதிமுக எம்.எல்.ஏக்களின் பலத்தை தவெகவுக்கு சேர்க்க மாமியாரும் மருமகனும் முன் நின்று பேச்சு நடத்தி வருகின்றனர்.
இது குறித்து பரபரப்பான கருத்தை வெளியிட்டிருக்கிறார் அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி. ‘’இந்த லாட்டரி கும்பல் அதிமுகவில் சேர்ந்து எவ்வளவு நாட்கள் ஆகிறது? இந்த அம்மையாரை குறை சொல்வதா அல்லது இந்த அம்மையாருக்கு வாய்ப்பு கொடுத்த எடப்பாடியை குறை சொல்வதா?

ஒரு அரசாங்கம் அமைக்க கூட்டணிக்கு தலைமை ஏற்ற கட்சி அமைகிற அரசுக்கு சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்டு அந்த அரசாங்கத்தை வீழ்த்தி மீண்டும் ஆட்சி அமைக்கிற வாய்ப்பை பெறுவது அழகா? அல்லது 10 தொகுதி குறைகிறது என்பதற்காக தங்கள் பொருளாதாரத்தை வளப்படுத்திக் கொள்ள பேரம் பேசி இணைய முயற்சிப்பது சரியா?
அதையும் தாண்டி இந்த லாட்டரி கும்பலின் முயற்சியில் லாட்டரி கழகத்தோடு இணைய முயற்சித்தால் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆன்மாவும் அவர்களது தொண்டர்களும் இவர்களை மன்னிக்க மாட்டார்கள்.

ஓ.எஸ் மணியன் இணைய கூடாது என்கிற கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அப்படி என்றால் தாவெகவுடன் அதிமுக இணைய போகிறது என்று கருத்து சொன்ன இந்த அம்மையார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் எடப்பாடி பழனிசாமி?
இந்த அம்மையாரால் அதிமுக ஒரு பின்னடைவுகளையும், பிரச்சனைகளையும் சந்திக்கப் போகிறது என்று இவரை கட்சியில் சேர்த்து வாய்ப்புக் கொடுத்த பொழுதே நான் எச்சரித்திருந்தேன். ’’என்கிறார்.



