நடிகர் பார்த்திபனுக்கு சாதி, மதமற்றவர் என்று சான்றிதழ் அளிக்கும்படி தாசில்தாரருக்கு உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.
ஆந்திர துணை முதல்வர் ‘உஸ்தாத் பகத் சிங்’ பட நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பார்த்திபன், ’’நான் ஒரு நாயுடு பையன். சென்னையில் பிறந்து வளர்ந்ததால் தெலுங்கு எனக்கு வராது. அடுத்த முறை வரும்போது தெலுங்கை நன்றாக பேசும்படி கற்றுக்கொள்கிறேன். இது சத்தியம்.’’என்று பேசியிருந்தார்.

சாதியை தூக்கிப்பிடிக்கிறார் பார்த்திபன் என்று சர்ச்சை எழுந்ததும் மன்னிப்பு கேட்டார் பார்த்திபன். அப்படியும் எதிர்ப்புகள் விடாமல் துரத்தியதால் இப்போது ஒரு அதிரடி முடிவை எடுத்திருக்கிறார்.
மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்று, சாதி, மதமற்றவர் என்று தனக்கு சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கோரி வேளச்சேரி தாசில்தாரருக்கு விண்ணப்பித்தார் பார்த்திபன். அந்த விண்ணப்பம் சோழிங்கநல்லூர் தாசில்தாரருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தேர்தல் பணிகள் காரணமாக தற்போது விண்ணப்பம் பரிசீலிக்க முடியவில்லை என்று அதிகாரிகள் சொன்னதால், உடனே பரிசீலிக்க உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் பார்த்திபன்.
இன்று இம்மனுவை விசாரித்த நீதிபதி, பார்த்திபனுக்கு சாதி, மதமற்றவர் என சான்றிதழ் அளிக்க உத்தரவிட்டார்.
சாதி, மதம் இல்லை என்பதை தெரிவிக்கும் விதமாக NO என்ற கண்ணாடி அணிந்து நீதிமன்றத்திற்கு வந்திருந்தார் பார்த்திபன். அவரது சட்டையிலும் சாதி, மதம் இல்லை என்று எழுதப்பட்டிருந்தது.



