பெரும்பான்மையை நிரூபிக்காததால் தவெகவை ஆட்சியமைக்க அழைக்கவில்லை ஆளுநர் அர்லேகர். இதையடுத்து உச்சநீதிமன்றத்தை நாடவிருக்கிறது தவெக.
இந்நிலையில் தவெகவுக்கு ஆதரவு அளித்திருக்கும் ஜோதிமணி எம்.பி., ‘’ஆளுநர் மாளிகையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டமன்றம் மட்டுமே. இதுகுறித்து உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் தெளிவாக உள்ளன. தனிப்பெரும் கட்சியான தவெக தலைவர் விஜய்யை மக்கள் முதலமைச்சர் என்று முடிவு செய்திருக்கிறார்கள். மக்கள் தீர்ப்பிற்கு குறுக்கே ஆளுநர் நிற்பது சரியல்ல.
ஆளுநருக்கு இந்த அளவிற்கு அரசியலும், அரசியல் சாசன விதிகளும் தெரியும் என்று நம்புகிறேன். பாஜக ஆளுநர் மாளிகை வழியாக அரசியல் செய்வதை உடனே நிறுத்தவேண்டும். ஆளுநர் , தவெக தலைவர் விஜய்யை உடனடியாக ஆட்சியமைக்க அழைக்க வேண்டும்’’ என்கிறார்.

ஆளுநர் அதிகாரத்தை யாரும் கேள்வி கேட்க முடியாது என்றால் 108 இடங்களில் வெற்றிபெற்றுள்ள தனிப்பெரும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சியமைக்க அழைக்காமல் ஒரு இடத்தில் வெற்றிபெற்றுள்ள பாஜகவை, ஆளுநர் ஆட்சியமைக்க அழைக்க முடியுமா?
திமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநருக்கு வரம்பற்ற அதிகாரம் எதுவும் கிடையாது. அவர் அரசியல் சாசனத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியவர் என்று உச்சநீதிமன்றம் பலமுறை தெளிவாகக் கூறியுள்ளது.
த.வெ.க வின் தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியிருக்கிறார். அவர் கூட்டணி என்று கடிதம் கொடுத்தாலும் , த.வெ.க தனிப்பெரும் கட்சி தான். தனிப்பெரும் கட்சியின் தலைவரை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பது தான் சரியானது. ஆட்சி அமைத்த பிறகு பெரும்பான்மையை சட்டமன்றத்தில் தான் நிரூபிக்க முடியும். ஆதரவுக் கடிதம் தர வேண்டிய அவசியம் இல்லை. மோடி, அமித்ஷாவின் அழுத்தத்திற்குப் பணிந்து தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்பை மாற்றி எழுத நினைப்பது மாபெரும் தவறு. இதை தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் ஏற்கமாட்டார்கள்’’என்கிறார்.



