சமீபகாலமாக மொபைல் செயலிகள் மூலம் வழங்கப்படும் உடனடி கடன் திட்டங்களில் சிக்கி பொதுமக்கள் தங்களது பணத்தையும், தனிப்பட்ட தகவல்களையும் இழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், இது குறித்து கோவை சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சமூக வலைதளங்கள் மற்றும் குறுந்தகவல்கள் மூலம் மிகக் குறைந்த நேரத்தில் கடன் கிடைப்பதாகக் கூறி கவர்ச்சிகரமான விளம்பரங்களைச் செய்து இந்த மோசடி கும்பல்கள் பொதுமக்களை ஈர்க்கின்றனர்.
இத்தகைய செயலிகளைப் பதிவிறக்கம் செய்யும் போதே, நமது மொபைலில் உள்ள தொலைபேசி எண்கள் மற்றும் புகைப்படங்களை அணுகுவதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் இந்த மோசடி கும்பல், அந்தத் தகவல்களைத் தவறாகப் பயன்படுத்தி மிரட்டல் விடுக்கின்றனர். கடன் பெற்றவர்களிடம் அதிக வட்டி வசூலிப்பது மட்டுமின்றி, அவர்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து தவறாகச் சித்தரித்து, உறவினர்களுக்கு அனுப்பி விடுவோம் என்று மிரட்டி தொடர்ந்து பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இத்தகைய மோசடிகளால் இளைஞர்களும், பெண்களும், சிறு தொழில் செய்பவர்களும் பெரிதும் பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கும் போலீசார், ரிசர்வ் வங்கி அங்கீகாரம் பெறாத செயலிகளைத் தவிர்க்குமாறு வலியுறுத்தியுள்ளனர். மேலும், தெரியாத நபர்கள் அனுப்பும் லிங்க் மூலமாகச் செயலிகளைப் பதிவிறக்கம் செய்யக் கூடாது என்றும், மொபைல் தகவல்களை அணுக அனுமதி அளிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
இது போன்ற மோசடிகளில் சிக்கினால் தயங்காமல் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் காவல் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.(Online Tamil News)



