தொடர் தோல்விகளால் அதிமுகவில் தலைமை மாற்றம் வேண்டி உட்கட்சிப்பூசல் வெடித்திருக்கிறது. இதில் எடப்பாடி அணியில் ஆதரவு பலம் குறைவாகவே இருக்கிறது. எஸ்.பி.வேலுமணி – சி.வி.சண்முகம் அணிக்கே ஆதரவு பலம் அதிகமாக இருக்கிறது. இன்று இது சட்டப்பேரவையிலும் ஒலித்தது.
அதிமுகவில் உட்கட்சிக் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், இன்னும் சட்டப்பேரவைக்கான கட்சித் தலைவர் தேர்வு செய்யப்படவில்லை. இந்நிலையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு குழுவாகவும் எஸ்.பி. வேலுமணி தலைமையில் ஒரு குழுவாகவும் சட்டப்பேரவைக்கு வந்தனர். சி.வி.சண்முகம் அவைக்கு வந்தும் பதவியேற்பில் பங்கேற்கவில்லை. அவர் ஆர்.ஏ.புரத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுவிட்டார்.

பேரவையில் எஸ்.பி.வேலுமணியை அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு செய்ய அதிமுக எம்.எல்.ஏக்கள் முடிவு செய்திருக்கிறார்கள். இதனால் எடப்பாடி பழனிசாமி உறுதி மொழி எடுத்தபோது சிலர் மட்டுமே மேஜையை தட்டினர். ஆனால், எஸ்.பி.வேலுமணி உறுதிமொழி எடுத்தபோது 30க்கும் மேற்பட்டோர் மேஜையை தட்டி வரவேற்றனர்.
பேரவையில் வெடித்த இந்த அதிமுக உட்கட்சிப்பூசல் எடப்பாடி அணியை கலக்கம் அடையச் செய்திருக்கிறது.



