பட்டிமன்றம் புகழ் ராஜா அமெரிக்காவுக்கு சென்றபோது அங்கே உணவு சமைத்துக்கொடுத்த பெண்களைப் பார்த்து, ‘’நீங்க என்ன சாதி?’’ என்று கேட்டார் என சம்பந்தப்பட்ட பெண்ணின் அண்ணன் முகநூலில் பதிவிட்டிருந்தார்.
இது தீயாய் பரவி வருகிறது. இதையடுத்து ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா இது குறித்து வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில், ‘’தம்பி ராஜாவைப் பற்றி ஒரு தவறான செய்தி ஊடகங்களில் பரவிக்கொண்டிருக்கிறது. யாரோ ஒரு தாய் அறிந்தோ அறியாமலோ அவரைப்பற்றிய தவறான கணிப்பில் அந்த செய்தியை வெளியிட்டிருக்கிறார். அவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன்… ராஜா என்னுடைய பண்ணையிலே 45 ஆண்டுகளுக்கு மேல் இருக்கிறார். அவர் எப்படிப்பட்டவர் என்பது எனக்கு நன்றாக தெரியும். சாதிகள் இல்லையடி பாப்பா என்ற சந்தத்தை அவர் தன் சிந்தையில் ஏற்றுக்கொண்டவர். அவருக்கு இப்படிப்பட்ட எண்ணங்கள் கிஞ்சித்தும் இருக்காது என்று நான் சத்தியம் செய்வேன்.

அவருடைய மனதில் சாதி வேறு கிஞ்சித்தும் இல்லை என்பதை சத்தியம் செய்து சொல்வேன். அப்படிப்பட்ட ஒரு மனிதரை தவறான கணிப்பில் பேசுவது எனக்கு வருத்தம். எங்களுடைய பண்ணையில் யாருமே அப்படி இல்லை. நாங்கள் அப்படி வளரவில்லை. ஏன் இந்த தவறான கருத்து வந்தது? அதுக்கு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்? ஒரு வேளை பேசியிருந்தால் கூட அவை திருத்தி இருக்கலாம். இது தமிழர்களுக்கு நல்லது அல்ல. தமிழ் வளர்ச்சிக்கும் இது நல்லது அல்ல.
ராஜா அப்படிப்பட்டவர் அல்ல என்பதை நான் மீண்டும் உறுதிப்படுத்துகிறேன்’’ என்கிறார்.



