இலக்கியத்திற்காக இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்று சாகித்திய அகாடமி விருது. இலக்கியத்தை மேம்படுத்தும் நோக்கிலும் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கிலும் 1954ல் தொடங்கப்பட்ட சாகித்திய அகாடமி விருது அமைப்பு டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்த சாகித்திய அகாடமி நிறுவனத்தால் இந்தியாவில் 24 மொழிகளின் சார்பில் ஆண்டுதோறும் இலக்கிய ஆளுமைகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்காக அந்தந்த மொழியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு குழுவினர் விருது பட்டியலை தயாரிக்கும். 2025ம் ஆண்டிற்கான விருது பட்டியலை 24 மொழிகளின் குழிவினரும் தயாரித்த விட்ட நிலையில், 18.12.2025 அன்று விருது அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

இந்தியாவில் உள்ள எல்லா நிறுவனங்களையும் கைப்பற்றும் அரசியல் வேலையை செய்யும் ஒன்றிய ஒன்றிய கலாச்சார அமைச்சகம் தலையிட்டு நிர்வாக குழுவின் முடிவுகளை நிறுத்தி வைத்ததாக எழுந்ததால், பாஜக அரசு, சாகித்திய அகாடமி நிறுவனத்தின் செயல்பாட்டை முடக்கியதற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்தது.
கருத்து சுதந்திரத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள இந்த தாக்குதலை எதிர்க்க இலக்கியத்தையும் எழுத்தையும் நேசிக்கும் அனைவரும் முன்வர வேண்டும் என்று குரல் கொடுத்தார் சு.வெங்கடேசன் எம்.பி.
அரசு ஒப்புதல் அளிப்பவர்களுக்குத்தான் விருது தர வேண்டும் என்று சாகித்திய அகாடமி விருதுகள் அறிவிக்க ஒன்றிய பாஜக அரசு தடை போட்டது ஏன்? இனி பாஜகவினருக்கு மட்டும்தான் சாகித்திய அகாடமி விருதா? என்று கேள்வி எழுப்பி இருந்தார் விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார்.

இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கு சு.வெங்கடேசன் எம்.பி. கோரிக்கை விடுத்திருந்தார்.
சாகித்ய அகாடமி விருதுகள் நிறுத்தி வைக்கப்பட்டது குறித்த அவரது கோரிக்கை கடிதத்திற்கு தேவையான நடவடிக்கைகளை விதிகளின் படி மேற்கொள்ள பரிந்துரைத்திருப்பதாக கஜேந்திர சிங் பதிலளித்திருக்கிறார்.
இதற்கு சு.வெங்கடேசன் எம்.பி., ‘’கம்பிகட்டும் கதையெல்லாம் சொல்லும் கஜேந்திர சிங் அவர்களே… உங்கள் அமைச்சகத்தின் தலையீடே விதிகளுக்கு எதிரானது தான். எனவே உங்களின் தலையீட்டை திரும்பப்பெறுக. நடுவர்குழு முடிவுகளை அறிவித்திடுக’’என்று தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.



