தாமதிக்கப்பட்ட நீதி என்பது மறுக்கப்பட்ட நீதி என்று சொல்வார்கள். அதாவது, நீதி உரிய நேரத்தில் கிடைக்காமல் தாமதமாகக் கிடைத்தால், அது அநீதியின் கணக்கில்தான் சேரும். வாதங்களின் அடிப்படையில் நீதி வழங்கப்படுவதால், தாமதிக்கப்படும் வாதங்களும் அதே கதிக்கு ஆளாவது இயல்பு. அரசியல் களத்தில் இத்தகைய அநீதிகள் பல முறை நிகழ்ந்திருக்கின்றன. அண்மைக்கால நிகழ்வுக்கு உதாரணம், த.வெ.க. தலைவரும் நடிகருமான விஜய்யின் கரூர் பரப்புரையில் நிகழ்ந்த 41 உயிர்ப் பலிகள்.
2025 செப்டம்பர் 27 அன்று நாமக்கல்லில் பகலில் பிரச்சாரம் செய்த விஜய் (Vijay), கரூருக்கு வரும்போது இரவு 7 மணிக்கு மேல் ஆகிவிட்டது. பகல் 12 மணிக்கு அவர் வருவார் என கட்சியின் அதிகாரப்பூர்வ சமூகவலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டதால், அதைப் பார்த்த இன்றைய தலைமுறை ரசிகர்கள் கூட்டம் கூட்டமாகத் திரள ஆரம்பித்துவிட்டனர். சினிமா கதாநாயகன் என்பதால் பெண்களும் அவரைப் பார்க்கும் ஆர்வத்துடன் முன்கூட்டியே வந்துவிட்டனர். இதில் கைக்குழந்தைகள், சிறுவர்-சிறுமியருடன் வந்தவர்களும் உண்டு. நேரம் கடந்து, தண்ணீர் தாகம் எடுத்து, விஜய் வந்து சேர்ந்தபோது நெரிசல் அதிகமாகி, மூச்சுத்திணறி, விஜய்யின் பரப்புரை வாகனம் முன்பாகவே மயங்கி விழுந்தார்கள். சற்று நேரத்தில், விஜய் தனது பரப்புரையை நிறுத்திவிட்டு, திருச்சிக்கு விரைந்து விமானம் மூலம் சென்னை சென்ற நிலையில், கரூரில் பலியானவர்களின் எண்ணிக்கை 41 ஆனது.
இந்த பெருந்துயரைப் பற்றிக் கேள்விப்பட்டதும் கரூரில் இருந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும் தங்களால் இயன்ற உதவியை செய்தனர். எனினும், முன்னாள் அமைச்சரும் கரூர் எம்.எல்.ஏ.வுமான செந்தில்பாலாஜிதான் இந்த நெருக்கடியை செயற்கையாக உருவாக்கியது போலவும், மரணங்களை எதிர்பார்த்திருந்து உடனடியாக மருத்துவமனைக்கு வந்தது போலவும் த.வெ.க. தரப்பில் சதிவலை கட்டமைக்கப்பட்டு, சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டது. பின்னர், அது சி.பி.ஐ. விசாரணை வரை சென்றது.
கரூர் அ.தி.மு.க.வின் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் அந்த நெரிசல் மரணங்களின்போது, உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து சென்றவர்களில் முக்கியமானவர். ஆனாலும், அ.தி.முக.வின் பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, கரூருக்கு வந்தபோது விஜய் தரப்பு மீது எந்த விமர்சனமும் வைக்காமல் தி.மு.க அரசு மீதான த.வெ.க.வின் குற்றச்சாட்டுக்கு ஆதரவளிக்கும் குரலிலேயே கருத்துகளைத் தெரிவித்தார். அதில் அரசியல் நோக்கம் இருந்தது என்பது அடுத்த சில நாட்களிலேயே வெளிப்பட்டது.
41 உயிர் பலிகளானபின் வாரக்கணக்கில் விஜய் வெளியே வராததால், வார இறுதிநாளான சனிக்கிழமைகளில் அவருடைய பரப்புரைக் கூட்டங்களுக்கு சென்ற ரசிகர்கள், என்னசெய்வது என்று தெரியாமல் தவித்தநிலையில், எடப்பாடி பழனிசாமியின் (Edappadi Palaniswami) பிரச்சாரக்கூட்டங்களுக்கு த.வெ.க. கொடியுடன் சென்று அதை அசைத்துக்காட்டினர். எடப்பாடி பழனிசாமியும் உற்சாகமாகி, கொடி பறக்குது தெரியுதா.. .கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டாச்சு என்கிற அளவில் பேசினார். தற்போது அந்த நிலைமை இல்லை.
அண்மையில் நடந்த த.வெ.க. நிர்வாகிகள் கூட்டத்தில், அ.தி.மு.க.வை ஊழல் சக்தி என்று விஜய் விமர்சித்தார். அதன்பிறகே, அ.தி.மு.க தரப்பிலிருந்து நேரடியாக விஜய் மீதான விமர்சனம் வெளிப்படத் தொடங்கியது. இதுநாள்வரை த.வெ.க.விடம் கடிபடுவது தி.மு.க.தானே என்று அ.தி.மு.க. மகிழ்ந்தது. இப்போது த.வெ.க. தங்களைக் கடித்து பிறாண்டுவதைக் கண்டதும் பதிலுக்கு கடிக்கிறது.
செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, கரூரில் விஜய்யைப் பார்க்க வந்தவர்கள் கூட்ட நெரிசலில் பலியானபோது, எல்லா கட்சியினரும் சந்தித்து ஆறுதல் சொன்னோம். ஆனால், விஜய் அங்கு வரவில்லை. அவரைப் பார்க்க வந்தவர்கள்தானே பலியானார்கள்? அப்படியென்றால் அதற்கு அவரும்தானே பொறுப்பு?” என லாஜிக்காகக் கேட்டிருக்கிறார்.
அ.தி.மு.க.வுடன் த.வெ.க. கூட்டணிக்கு வரவில்லை என்றான பிறகு, அ.தி.மு.க.வை த.வெ.க. விமர்சித்தபிறகு இந்த வாதத்தை வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதுதான் தாமதிக்கப்பட்ட வாதம். உயிர்ப்பலிகள் நிகழ்ந்த அன்றே விஜய்தான் காரணம் என்பதை எடப்பாடி பழனிசாமி சொல்லியிருந்தால், த.வெ.க. உருவாக்கிய சதிக்கோட்பாடுகள் அத்தனையும் நொறுங்கி, உண்மை புலப்பட்டிருக்கும். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, மற்ற கட்சிகள் எல்லாமும் களத்தில் நிற்கும்போது விஜய்யும் அவரது கட்சியினரும் எங்கே போனார்கள் என்ற கேள்விதான் முதன்மையாக இருந்திருக்கும். அ.தி.மு.க.வின் ‘முன்னாள்’கள் த.வெ.க. பக்கம் போவதையும் எடப்பாடி பழனிசாமியால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.(Online Tamil News)
அடுத்த கட்சிகளை தீயசக்தி, ஊழல் சக்தி என்று குற்றம்சாட்டும் ப்ளாக் டிக்கெட்- ஊழல் சக்தியான த.வெ.க.வை அப்போதே தோலுரித்திருக்க வேண்டிய வாய்ப்பை இழந்துவிட்டது, அ.தி.மு.க. பொதுச்செயலாளரின் தாமதிக்கப்பட்ட வாதம்.
தலையங்கம் : தாமதிக்கப்படும் வாதங்கள்



