ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்து வராது என்று முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியாகச் சொல்லிவிட்டதால், அதிகாரத்தில் பங்கினை எதிர்பார்க்கும் காங்கிரசுக்கு இது அதிர்ச்சியாக இருக்கும். இதனால் திமுக – காங்கிரஸ் கூட்டணி உடைகிறதா? என்று பலரும் கேள்வி எழுப்பியபோது, கூட்டணியில் சிக்கல் ஏற்படும் என்று சிலர் நினைக்கின்றனர்.
ஆனால், திமுக – காங்கிரஸ் கூட்டணியில் எந்தவித பிணக்கோ, சிக்கலோ வராது. திமுக – காங்கிரஸ் தலைமை பேசி இதற்கு தீர்வு காண்பார்கள். அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் கலந்தாலோசித்து முடிவெடுப்பார்கள் என்று எளிதாக கடந்து சென்றார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை.

முதலைமைச்சரும் இதை உறுதிப்படுத்துகிறார். அவர், ‘’திமுக – காங்கிரஸ் கூட்டணி இணக்கமாக இருக்கிறது. கூட்டணியில் குழப்பம் என்று திட்டமிட்டு பரப்பப்படுகிறது. குழப்பம் எதுவும் இல்லை. திமுக, காங்கிரஸ் இடையில் சிலர் குழப்பம் ஏற்படுத்த திட்டமிட்டு சதி செய்கிறார்கள். ஆனால், திமுகவும் காங்கிரஸும் இணைந்துதான் சட்டமன்ற தேர்தலை சந்திக்கும்.
அரசியலை கடந்து ராகுல்காந்தியை என்னுடைய சகோதரராக பார்க்கிறேன். அவரும் அப்படித்தான்’’ என்கிறார்.



