நயினார் நாகேந்திரனின் பேச்சால் அதிமுகவில் சலசலப்பு எழுந்திருப்பதால் தேசிய ஜனநாயக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக வருகிறது என்ற பேச்சு எழுந்ததுமே வரும் 2026ல் தமிழகத்தில் என்.டி.ஏ. ஆட்சி மலரும் என்று அறிவித்தவர் அமித்ஷா. அடுத்தடுத்த தமிழக வருகையின் போதும் அவர் இதையே சொல்லி இருந்தார்.

கூட்டணி உறுதியான பின்னர் மேடையில் எடப்பாடி பழனிசாமியை பக்கத்தில் வைத்துக்கொண்டே தமிழகத்தின் என்.டி.ஏ. ஆட்சி மலரும் என்றார் அமித்ஷா.
பிரதமர் மோடியும் கூட மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் இதையே வெளிப்படுத்தினார். ஆனாலும் தமிழகத்தில் அதிமுக ஆட்சிதான் என்றே பழனிசாமியும் அவரது கட்சியினரும் சொல்லி வந்தனர்.

ஆனாலும் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்ற கணக்கில்தான் பாஜக உள்ளது என்ற பேச்சு இருக்கும் நிலையில், அதை உறுதிப்படுத்தி இருக்கிறார் நயினார் நாகேந்திரன். ‘’பாஜகவில் இருந்து 20,30 எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்கு செல்வார்கள். அவர்களில் சிலர் அமைச்சர்களாகவும் ஆவார்கள்’’ என்று தங்களின் நிலைப்பாட்டினை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.



