தமிழ்நாடு அரசின் சட்ட விவகாரங்களில் தலையிட்டு மீண்டும் மீண்டும் மூக்குடைபட்டு வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. துணைவேந்தர்கள் நியமன விவகாரத்திலும் மீண்டும் மூக்குடைப்பட்டிருக்கிறார்.
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் என்ற தமிழ்நாடு அரசின் சட்டத்திற்கு உயர்நீதிமன்றம் விதித்த தடையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. கடந்த ஆண்டு மே மாதத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் அமர்வு அரசின் சட்டத்திற்கு தடை வித்திருந்தது.

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே என்றும், பல்கலைக்கழகங்களில் வேந்தராக தமிழக முதல்வர் நியமனம் என்று உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காததால் உச்ச நீதிமன்றம் தனக்கு உரிய சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் அளித்தது. இதற்கு தடை கேட்டு பாஜக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் அமர்வு தடை போட்டது.
இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது தமிழ்நாடு அரசு. இந்த வழக்கில் ஜி.ஆர்.சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் விதித்த தடையை ரத்து செய்திருக்கிறது உச்சநீதிமன்றம். இதன் மூலம் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில முதல்வருக்கே என்பது உறுதியாகி இருக்கிறது.



