வங்கதேசத்தின் 13வது பாராளுமன்றத் தேர்தலில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி கட்சி 300 இடங்களில் 209 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருகிறது. ஜமாத்-இ-இஸ்லாமி 68 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. புதிய அரசு அமைப்பிற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் நடந்து முடிந்த நிலையில், முன்ஷிகஞ்ச் (Munshiganj) மாவட்டத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பெரும் வன்முறை வெடித்தது. இந்தத் தேர்தல் பிந்தைய வன்முறையில் ஒருவர் உயிரிழந்ததுடன், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர் ஆளுங்கட்சியான அவாமி லீக் ஆதரவாளர் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாக்குப்பதிவு முடிந்து முடிவுகள் அறிவிக்கப்படும் நேரத்தில், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது பின்னர் ஆயுத மோதலாக மாறியது. இதில் வீடுகள் மற்றும் கடைகள் சேதப்படுத்தப்பட்டன. தொடர்ந்து, காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மோதலால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்று வருகின்றனர். மேலும் வன்முறை பரவாமல் இருக்க முன்ஷிகஞ்ச் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.மேலும், கூடுதல் ராணுவ வீரர்கள் மற்றும் அதிரடிப்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.(Online Tamil News)


