இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தற்போது எரிபொருள் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், சில பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுபாடு நிலவுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. உள்நாட்டில் எண்ணெய் தட்டுபாட்டை தவிர்க்க எண்ணெய் நிறுவனங்கள் தவித்து வரும் நிலையில், அண்டை நாட்டுக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கையின் அடிபடையில் இந்தியா ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக இலங்கையில் கடும் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு, போக்குவரத்து மற்றும் அன்றாட வாழ்க்கை முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்த இக்கட்டான சூழ்நிலையை உணர்ந்த இந்திய அரசு, தனது சொந்த நாட்டின் தேவைகளுக்கு மத்தியிலும் சுமார் 38,000 மெட்ரிக் டன் எரிபொருளை இலங்கைக்கு அவசர உதவியாக வழங்கியுள்ளது.
இந்த விநியோகத்தில் 20,000 டன் டீசல் மற்றும் 18,000 டன் பெட்ரோல் ஆகியவை அடங்கும். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) மூலம் இந்த எரிபொருள் கப்பல்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க, இதற்கு நன்றி தெரிவித்துள்ளார். இக்கட்டான இக்காலகட்டத்தில் இந்தியா செய்துள்ள இந்த உதவி, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்த எரிபொருள் வருகையைத் தொடர்ந்து, இலங்கையில் நிலவி வந்த நீண்ட வரிசைகள் ஓரளவு குறையும் என்றும், பொதுமக்களுக்கான எரிபொருள் விநியோகம் சீராகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.(Online Tamil News)


