இந்தியாவில் நிலவி வரும் குழந்தைகளின் புற்றுநோய் பாதிப்பு என்பது தற்போது ஒரு “அமைதியான நெருக்கடியாக உருவெடுத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நம் நாட்டில் சுமார் 50,000 முதல் 60,000 வரையிலான குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகப் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ‘தி லான்செட்’ (The Lancet) மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள ‘உலகளாவிய நோய் சுமை 2023’ (Global Burden of Disease 2023) ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

இது உலகளவில் புற்றுநோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையில் சுமார் 25 சதவீதமாகும். மற்ற தொற்றுநோய்களைக் காட்டிலும், புற்றுநோயானது குழந்தைகளிடையே அதிக அளவிலான உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருவது மருத்துவத்துறையில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ரத்தப் புற்றுநோய், மூளைக் கட்டிகள் மற்றும் நிணநீர் சுரப்பி புற்றுநோய்கள் போன்றவை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் வகைகளாகக் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த நெருக்கடி தீவிரமடைவதற்குப் பின்னால் பல சமூக மற்றும் பொருளாதாரக் காரணங்கள் உள்ளன. பல குடும்பங்களில் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளைச் சாதாரண காய்ச்சல் அல்லது உடல்நலக்குறைவு எனத் தவறாகப் புரிந்து கொள்கின்றனர். இதன் விளைவாக, நோய் முற்றிய நிலையிலேயே குழந்தைகள் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படுகின்றனர். மேலும், புற்றுநோய் சிகிச்சை என்பது மிக நீண்ட காலத்தைச் சார்ந்தது என்பதாலும், அதற்கு அதிக தெகை தேவைப்படுவதாலும், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் சிகிச்சையைப் பாதியிலேயே கைவிடும் சூழல் நிலவுகிறது. இதுவே இந்தியாவில் குழந்தைகளின் புற்றுநோய் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதற்குக் காரணமாக அமைகிறது.

லான்செட் ஆய்வுகளின்படி, ஆரம்பக்காலத்திலேயே நோயைக் கண்டறிந்து முறையான சிகிச்சை அளித்தால், குழந்தைகளை இந்தப் பாதிப்பிலிருந்து 90 சதவீதத்திற்கும் மேலாகக் காப்பாற்ற முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் குழந்தைகளின் உடலில் தோன்றும் அசாதாரணக் கட்டிகள், நீண்ட காலக் காய்ச்சல், தொடர் உடல் சோர்வு மற்றும் திடீர் எடை குறைவு போன்ற அறிகுறிகளைக் கூர்ந்து கவனித்து, உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும். சரியான நேரத்தில் கிடைக்கும் மருத்துவத் தலையீடு மட்டுமே இந்த அமைதியான நெருக்கடியிலிருந்து எதிர்காலத் தலைமுறையைக் காக்க உதவும்.(Online Tamil News)


