தமிழ்நாட்டில் (TN-KET) என்ற காசநோய் இறப்பில்லா திட்டம் தொடங்கப்பட்ட பிறகு, ஆறு மாவட்டங்களில் காசநோய் மரணங்கள் தொடர்ந்து குறைந்துள்ளதாக ‘குளோபல் ஹெல்த் ஆக்ஷன்’ இதழில் வெளியான புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

மாநில காசநோய் பிரிவு மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் இணைந்து நடத்திய இந்த ஆய்வு, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இத்திட்டம் ஏற்படுத்திய தாக்கத்தை விவரிக்கிறது. உலக சுகாதார அமைப்பின் இலக்கான 2030-க்குள் 90% மற்றும் 2035-க்குள் 95% காசநோய் இறப்புகளைக் குறைக்கும் நோக்கத்தோடு இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 214 பேருக்கு நுரையீரல் காசநோய் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் ஏப்ரல் 2022-ல் சென்னை தவிர்த்த மற்ற 30 மாவட்டங்களில் தொடங்கப்பட்ட இத்திட்டம், காசநோய் இறப்பைக் குறைப்பதற்காக இந்தியாவில் கொண்டு வரப்பட்ட முதல் மாநில அளவிலான பிரத்யேக திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ், மருந்துகளுக்குக் கட்டுப்படாத தீவிர பாதிப்புள்ள பெரியவர்கள் கண்டறியப்பட்டு, ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே அவர்களின் உடல்நிலை பரிசோதிக்கப்படுகிறது. தீவிர நோய்த்தொற்று, கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு அல்லது சுவாசக் குறைபாடு உள்ள நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, அவர்கள் விரிவான மருத்துவ மதிப்பீடு மற்றும் உள்நோயாளி சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஜூலை 2021-ஜூன் 2022 மற்றும் ஜூலை 2022-ஜூன் 2024 ஆகிய காலக்கட்டங்களின் தரவுகளை ஒப்பிடும்போது, தருமபுரி (12.6% லிருந்து 4.8%), கரூர் (7.0% லிருந்து 4.6%), விழுப்புரம் (6.1% லிருந்து 4.6%), கன்னியாகுமரி (10.4% லிருந்து 8.1%), கடலூர் (6.7% லிருந்து 4.1%) மற்றும் சேலம் (7.8% லிருந்து 4.9%) ஆகிய ஆறு மாவட்டங்களிலும் காசநோய் இறப்பு விகிதம் மிகக் கணிசமாகக் குறைந்துள்ளது. தீவிர பாதிப்பு கண்டறியப்பட்டு இரண்டு காலாண்டுகள் கண்காணிக்கப்பட்டதில் இந்த முன்னேற்றம் தெரியவந்துள்ளது.
மாநில காசநோய் அலுவலரும் இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியருமான டாக்டர் ஆஷா பிரடெரிக் இதுகுறித்து கூறும்போது, காசநோய் இறப்புகளைக் குறைக்க நோயாளிகளுக்கு இருக்கும் சர்க்கரை நோய், கல்லீரல் பாதிப்பு அல்லது ரத்த சோகை போன்ற பிற நோய்களையும் (Co-morbidities) சேர்த்து கவனித்து தகுந்த சிகிச்சை அளிப்பது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார். இதற்காகப் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உதாரணமாக, தருமபுரி மருத்துவக் கல்லூரியில் போதுமான நுரையீரல் நிபுணர்களும் செயற்கை சுவாசக் கருவி (Ventilator) வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. கரூர் மாவட்டத்தில் முதியவர்கள் மற்றும் பிற நாள்பட்ட நோய்கள் உள்ளவர்களுக்கும், விழுப்புரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்க மறுக்கும் நோயாளிகளுக்கு ‘TB Champions’ மூலம் கவுன்சிலிங் வழங்கி உள்நோயாளி சிகிச்சைகள் உறுதி செய்யப்படுகின்றன.(Online Tamil News)


