ஒட்டுமொத்த அதிமுகவும் தவெகவில்தான் உள்ளது. அதிமுக தொண்டர்களின் வாக்குகள் இல்லாமல் தவெகவுக்கு வெற்றி கிடைத்திருக்காது என்று உண்மையைச் சொல்கிறார் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா.

தவெகவில் போய் சேர்ந்ததுமே, தை பிறக்கும் , அப்புறம் பாருங்க என்று சஸ்பென்ஸ் வைத்திருந்தார் செங்கோட்டையன். அப்போது எடப்பாடியின் சாதுர்யத்தால் அதிமுகவில் இருந்து யாரும் தவெகவுக்கு போகவில்லை. ஓபிஎஸ்சும், அவரது அணியில் இருந்து வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்துவிட்டனர்.
ஆனால் இப்போது நிலைமை வேறாகிவிட்டது.
இசக்கி சுப்பையா, ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்யபாமா உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துவிட்டனர்.

சங்ககிரி முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரராஜூ, ஸ்ரீவில்லிபுத்தூர் மாஜி எம்.எல்.ஏ. மான்ராஜூ, கலசபாக்கம் முன்னாள் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், பாப்பிரெட்டிபட்டி முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி, ஆற்காடு முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.சீனிவாசன், வீரபாண்டி முன்னாள் எம்.எல்.ஏ ராஜமுத்து உள்ளிட்டோரும் தவெகவில் இன்று இணைந்துவிட்டனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, மூன்று தேர்தல்களில் வென்றவர் இவரும் இன்று அதிமுகவில் இணைந்துவிட்டார்.
கடலூர் வடக்கு மண்டல மாவட்டச் செயலாளரும், அதிமுக முன்னாள் அமைச்சரும், முன்னாள் எம்.பியுமானவர் எம்.சி.சம்பத். இவரும் இன்று தவெகவில் இணைந்துவிட்டார்.
உடுமலை மேற்கு மண்டல மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான உடுமலை ராதாகிருஷ்ணனும் இன்று தவெகவில் இணைந்துவிட்டார்.
மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் தவெகவுக்கு வர துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த இணைப்பு விழாவில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, ‘’ஒட்டுமொத்த அதிமுகவும் தவெகவில்தான் உள்ளது. அதிமுக தொண்டர்களின் வாக்குகள் இல்லாமல் தவெகவுக்கு வெற்றி கிடைத்திருக்காது’’ என்று உண்மையைச் சொல்கிறார்.
’’அதிமுகவை அபரிக்க நினைக்கிறீங்க, அதிமுகவை அழிக்க நினைக்கறீங்க’’என்று கடந்த வாரம் வீடியோ வெளியிட்டிருந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். அவர் சொன்னது மாதிரியே அதிமுக கூடாரத்தை காலியாக்குகிறது தவெக.



