வங்கதேசத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நேரலை செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை அந்நாட்டு அரசு தற்போது அதிகாரப்பூர்வமாக நீக்கியுள்ளது.

முன்னதாக, 2026 ஜனவரி மாதத்தில் அப்போதைய இடைக்கால அரசு இந்தத் தடையை விதித்திருந்தது. இதற்கு மிக முக்கிய காரணமாக வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் விவகாரம் பார்க்கப்பட்டது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட முஸ்தபிசுர் ரஹ்மான், பிசிசிஐ-யின் அறிவுறுத்தலின்படி அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவும், இரு நாடுகளுக்கு இடையே நிலவிய அரசியல் பதற்றங்கள் காரணமாகவும் ஐபிஎல் ஒளிபரப்பிற்குத் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று வங்கதேசத்தின் புதிய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் இந்தத் தடையைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. விளையாட்டையும் அரசியலையும் ஒன்றாகக் கலக்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ள புதிய அரசு, ரசிகர்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து இந்த முடிவை எடுத்துள்ளது. இதன் மூலம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் போன்ற விளையாட்டு சேனல்களில் ஐபிஎல் 2026 போட்டிகளை வங்கதேச ரசிகர்கள் இனி நேரலையில் கண்டு மகிழலாம். இந்த அறிவிப்பு அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.(Online Tamil News)


