கலர் கலராக ஆடை அணிந்து பொங்கல் கொண்டாட்டங்கள் நடைபெறும் போது வெள்ளைச்சேலை கட்டி பொங்கலிடும் கொண்டாட்டமும் நடந்து வருகிறது. நூறு ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்தில் நடந்து வருகிறது இப்படி ஒரு வித்தியாசமான பொங்கல் விழா. சிவகங்கை அருகே சலுகைபுரத்தில்தான் நடந்து வருகிறது இந்த விழா.
முத்தரையர் சமூக மக்கள் இப்பொங்கலை வெகு விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள். மாட்டுப் பொங்கலில் இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இதற்காக மார்கழி முதல் தேதியிலிருந்து விரதம் இருக்கின்றனர். இதற்கும் ஒரு வாரத்துக்கு முன்பு மாட்டு தொழுவம் அருகே ஒன்று கூடி, இறைவன் அனுமதி கேட்கின்றனர். அனுமதி கிடைத்ததும், விழாவுக்கான பிடி மண் கொடுக்கின்றனர். அதன் பின்னர் ஒரு வாரம் இரவில் வீட்டுக்குச் செல்லாமல் தொழுவம் அருகிலேயே ஆண்கள் தங்குகிறார்கள். பெண்கள் வீட்டில் விரதம் இருக்கிறார்கள். இந்த விரதம் இருக்கும் நாட்களில் பெண்கள் ஆடம்பரத்தை விரும்புவதில்லை. கை வளையல், மெட்டி, கொலுசு உட்பட எந்த அணிகலனையும் பெண்கள் அணிவதில்லை. ஏழை, செல்வந்தர் என்கிற பேதத்தை போக்குவதற்காகவே இப்படி எளிமையை கடைப்பிடித்து வருகின்றனர்.

சாமியாடிகள் வீடு, வீடாகச் சென்று அழைப்பு விடுத்த பின்னர் பொங்கல் வைக்கும் பெண்கள் வெள்ளை சேலை உடுத்தி வீடுகளில் இருந்து பொங்கல் பானைகளை எடுத்து செல்கின்றனர். அதற்கு தேவையான பொருட்கள், விறகுகளை ஓலைப் பெட்டிகளில் குடும்பத்தினர் எடுத்து வருகின்றனர்.
மண் அடுப்பில் பொங்கல் வைத்ததும், அனைவரது பொங்கலையும் ஒன்று சேர்த்து 61 தெய்வங்களுக்கு தனித்தனியாக தலைவாழை இலையில் படையல் வைத்து வழி படுகின்றனர். பின்னர் அவற்றை ஒன்று சேர்ந்து சாப்பிடுகின்றனர். அனைவரது பொங்கலையும் ஒன்று சேர்த்து உண்பதால், பகைவர்களையும் ஒன்று சேர்க்கும் விழாவாக கொண்டாடி வருகிறார்கள்.அதைத் தொடர்ந்து மாடுகளுக்கு துண்டு கட்டிவிட்டு, சுதந்திரமாக அவற்றை அவிழ்த்து விடுகின்றனர்.

நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் இவ்விழாவில் மாடுகளை விழாவுக்கு முந்தைய நாளில் காட்டுக்குள் விட்டுவிடுகிறார்கள். சாமியாடி அழைத்ததும், அவை தானாக தொழுவத்துக்கு வந்து அடைந்துவிடுகிறது என்கிறார்கள்.
விழா முடிந்ததும் மாலையில் நேர்த்திக்கடன் கரும்புகள், விரதமிருந்து அம்மன் காலடியில் வைத்த எலுமிச்சை ஆகியவை ஏலம் விடப்படுகிறது. கரும்பு, எலுமிச்சையை ஏலம் எடுத்தால், நினைத்த காரியம் கைகூடும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக இருப்பதால் ஆண்டுதோறும் ஏலத்தொகை அதிகரித்து கொண்டே செல்கிறது.



