சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் அடுத்த மடப்புரத்தில் பத்ரகாளி அம்மன் கோவிலில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித்குமார். இவர் தனது காரில் இருந்த நகைகளை திருடிவிட்டதாக பேராசிரியை நிகிதா என்பவர் போலீசில் புகாரளித்தார். இந்த புகாரின் பேரின் அஜித்குமாரை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச்சென்று அடித்து கொலை செய்தனர் போலீசார்.
விவகாரம் பெரிதானதும் இந்த சம்பவத்தில் 10 போலீசார் கைது செய்யப்பட்டனர். சிபிஐ விசாரணையும் நடந்து வருகிறது. மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

நேற்றைய விசாரணையில், நகை திருட்டுக்கான முகாந்திரமே இல்லை. ஆகவே நிகிதா பொய் புகார் கொடுத்திருக்கிறார் என்று சிபிஐ சொல்ல, ஒன்றுமே இல்லாத ஒரு விசயத்திற்காக ஒரு இளைஞரை அடித்தே கொல்வதா? என்று வேதனை தெரிவித்த நீதிபதி ஸ்ரீமதி, பொய் புகார் அளித்த நிகிதா மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று கேள்வி எழுப்பி, வழக்கின் மறு விசாரணையை வரும் 16ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.
இந்நிலையில் அஜித்குமாரின் தாயார் மாலதி இன்று செய்தியாளர்களை சந்தித்து தனது மகனுக்கு நடந்த கொடூரம் குறித்து சொல்லி ஆவேசப்பட்டார். ‘’என் மகன் அஜித்குமார் குற்றவாளி இல்லை . என் மகன் திருடன் இல்லை என்று உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி நேற்று கூறியிருக்கிறார். ஒரு தாய்க்குத்தான் தெரியும் ஒரு தாயின் வலி. அந்த வலியை உணர்ந்து அவர் தீர்ப்பு கூறியிருக்கிறார்.

என் மகன் நகையை திருடியதாக நிகிதா பொய் புகார் அளித்தது ஏன்? யாரோ 5 பேர் சொல்லித்தான் போலீசார் என் மகனை அடித்து கொன்றிருக் கிறார்கள். அஜித்தை அடிக்கச் சொன்ன அந்த 5 பேர் யார்? நிகிதாவை முதலில் கைது செய்ய வேண்டும். அந்த 5 பேரும் வெளியே வரவே கூடாது.
சிபிஐ விசாரணையில் நம்பிக்கை இருக்கிறது. என் மகன் நகையை எடுத்திருக்க மாட்டான் என்பது எனக்குத் தெரியும். அவனை அப்படி நான் வளர்க்கவில்லை. ஊர் மக்களும் உலகமும் நம்ப வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வளவு நாளும் காத்திருந்தேன். இப்போது நீதிபதியே என் மகன் குற்றவாளி இல்லை என்று சொல்லிவிட்டார்.

என் மகன் தீவிரவாதியா என்ன? நகையை திருடியதாக சந்தேகம் இருந்தால் ஜெயிலில் வைக்க வேண்டியதுதானே? ஏன் அடித்துக் கொல்ல வேண்டும்? ஒன்றுமே தெரியாத ஒரு அப்பாவியை இப்படியா செய்வது? மரத்தில் தொங்க விட்டிருக்கிறார்கள். உங்களையும் ஒரு தாய்தானே பெற்றிருப்பாள். தண்ணீர் கூட கொடுக்காமல், மிளகாய் பொடி தூவி ஒரு அரக்கனை கொல்வது போன்று கொடூரமாக கொன்றிருக்கிறார்கள். தண்ணீர் கொடுக்கக்கூடாது என்று சட்டத்தில் இருக்கிறதா? என் குலை கொதிக்குது.’’




