தேர்தல் நெருக்கத்தில் ஒவ்வொரு சங்கத்தினரிடமும் அனைத்துக்கட்சிகளும் ஆதரவு கோருவது உண்டு. அந்த சந்தர்ப்பத்தில் இதுதான் தருணம் என்று தங்கள் சார்பான கோரிக்கைகளை முன்வைப்பது உண்டு. அப்படித்தான் இந்த 2026 சட்டமன்ற தேர்தலில் வணிகர் சங்க பேரமைப்புகளின் தலைவர் விக்கிரமராஜாவிடம் அனைத்துக்கட்சிகளும் ஆதரவு கோரியிருப்பது குறித்து அவரே செய்தியாளர்களிடம் கூறினார்.

’’வணிகர்களின் வாக்கு ஒரு கோடியை உள்ளடக்கி இருக்கிறது. தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக, பாஜக, விசிக, கம்யூனிஸ்டுகள், தவெக உள்ளிட்ட அனைத்து கட்சியின் நிர்வாகிகளும் எங்களின் கோரிக்கை மனுவை கேட்டு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
எங்கள் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டு முழுமையாக ஏற்றுக்கொண்டு எழுத்துப்பூர்வமாக உத்தரவு தருகின்ற கட்சிக்கு ஆதரவு தருவோம். விரைவில் எங்களுக்கு நல்ல செய்தியை தருகின்ற அரசியல் கட்சியை நோக்கி எங்களின் பேரவை நகரும் என்பதில் சந்தேகம் இல்லை.

நாங்கள் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் தேர்தலில் போட்டியிடுபவர்களை வெற்றிபெறச் செய்யும் இடத்தில் இருக்கிறோம்.
முதலமைச்சரை எந்த நேரத்திலும் சந்திக்கும் இடத்தில்தான் இப்போது இருக்கிறோம். இருந்தாலும் எங்கள் கோரிக்கையினை எழுத்துப் பூர்வமாக ஏற்கும் கட்சிக்கு எங்களின் ஆதரவு.’’



