மக்களவையில் காங்கிரஸ் பெண் எம்.பிக்கள் பிரதமர் மோடியை தாக்க சதி செய்திருந்தனர். இதை தெரிந்துகொண்டு அவைக்கு களங்கம் ஏற்படாமல் இருக்க பிரதமர் மோடியை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டேன் என்று குற்றம் சாட்டி இருக்கிறார் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா. இடதுசாரி தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்து வருவதால் எதிர்க்கட்சிகள் எனக்கு சவக்குழி தோண்டப் பார்க்கின்றன என்று பிரதமர் மோடியும் குற்றம்சாட்டி இருந்தார்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் மக்களவை உறுப்பினர்கள், பெண் எம்.பிக்கள் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் எழுதினர்.’’ அந்த கடிதத்தில், எங்களில் பெரும்பாலோர் எளிய பின்னணியில் இருந்து வந்தவர்கள்; பலர் முதல் தலைமுறை அரசியல்வாதிகள். மக்கள் மத்தியில் பல தசாப்தங்களாக உழைத்து, எதிர்ப்புகளையும் பாகுபாடுகளையும் எதிர்கொண்டு எங்கள் அரசியல் பயணத்தை உருவாக்கியவர்கள் நாங்கள்.

எங்களின் நேர்மையை கேள்விக்குள்ளாக்குவது, பொதுவாழ்க்கையில் மரியாதையுடனும் தைரியத்துடனும் தங்கள் இடத்தைப் பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு பெண்ணின் மீதும் நடத்தப்படும் கடுமையான தாக்குதலாகும்’’ என்று குறிப்பிட்டிருந்தனர்.
இதையடுத்து மக்களவையில் நடந்தது குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ வீடியோ வெளியிட்டிருந்தார்.
’’அந்த கிரண் ரிஜ்ஜுஜு வீடியோவை வெளியிட்டதற்கு நன்றி. அது பாராளுமன்ற மரபுக்கு உட்பட்டதல்ல என்றாலும், அது எங்கள் நிலைப்பாட்டை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், பெண்கள் எம்.பி.க்களாகிய நாங்கள் பதாகைகளை பிடித்துக்கொண்டு, ஆளுங்கட்சியினருடன் அமைதியாக உரையாடியதை தெளிவாக காண முடிகிறது. இதற்குப் பயந்தே பிரதமர் நாடாளுமன்றம் வரவில்லை என்று நீங்கள் சொல்வது பிரதமரின் பயத்தையும்,பலவீனத்தையுமே காட்டுகிறது.
நாங்கள் யாரையும் மிரட்டவில்லை. வன்முறையிலும் ஈடுபடவில்லை. “எதிர்பாராத சம்பவம் திட்டமிடப்பட்டது” என்ற பொய்யான குற்றச்சாட்டையும், பிரதமரை தாக்க முயன்றதாக பெண்கள் எம்.பி.க்கள் மீது பரப்பப்பட்ட அரசுக்கு ஆதரவான ஊடக கதைகளையும் இந்த வீடியோ முற்றிலும் பொய்யென நிரூபிக்கிறது. அந்த பொய் கதை இப்போது முழுமையாக உடைந்துவிட்டது.

இப்படிப்பட்ட ஒரு சூழல் உருவானதற்கு காரணம் , முக்கிய தேசிய விவகாரங்களில் பேச எதிர்க்கட்சிகளுக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் உரிமை மறுக்கப்பட்டதுதான்.
தேசிய பாதுகாப்பு குறைபாடுகள், எல்லை ஊடுருவல்கள் குறித்து பிரதமரின் மௌனம், இந்தியாவின் நலன்களுக்கு எதிரான இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் போன்ற முக்கிய விஷயங்களில் பேச அனுமதி வழங்கப்படவில்லை.
நாங்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண்கள் எம்.பி.க்கள். உறுதியானவர்கள், அச்சமற்றவர்கள், அமைதியானவர்கள். எந்த மிரட்டலும், எந்த பொய்யான கதையும் எங்களை மௌனமாக்க முடியாது’’என்கிறார் .



