கூட்டணி ஆட்சி என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்து வராது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக சொல்லிவிட்ட பின்னரும் கூட மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட சில காங்கிரசார் அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று பேசி வருகின்றனர்.
இதனால் திமுகவினரும் அந்த காங்கிரசாருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். ‘’கூட்டணி ஆட்சியா? ஒரு கட்சி ஆட்சியா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். 2006ல் மக்கள் தீர்ப்பை செயல்படுத்தாதது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தவறு’’ என்று சொல்லி இருந்தார். அதாவது, 2006 தேர்தலில் திமுக கூட்டணி 163 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இதில் திமுக 96 இடங்களிலும் காங்கிரஸ் 34 இடங்களிலும் பாமக 18 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. தனிப்பெரும்பான்மையுடன் அன்றைக்கு திமுக வெல்லாததால் காங்கிரஸ் கூட்டணியின் தயவில் திமுக ஆட்சி அமைத்தது. அன்றைக்கு அதிகாரத்தில் பங்கு பெற்றிருக்கலாம். காங்கிரஸ் அதை செய்ய தவறி விட்டது என்பதுதான் மாணிக்கம் தாகூரின் கருத்து.

இதில் ஆத்திரமடைந்த அமைச்சர் ராஜகண்ணப்பன், காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு வந்தால் வரட்டும், வராவிட்டால் போகட்டும் . அதுநமக்கு தேவையில்லை. கூட்டணியை நம்பி இல்லை. ஆட்சியில் பங்கு கிடையாது. 2026ல் திமுக 170 தொகுதிகளில் போட்டியிடும். 160 தொகுதிகள் வரை வெற்றி வாய்ப்பு உண்டு என்று பேசியது திமுக – காங்கிரஸ் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையடுத்து, ’’2021ல் 173ல் போட்டியிட்டு 133 வெற்றி . நாங்கள் கேட்பது நீங்கள் தோல்வி அடைந்த இடங்களை தான். அதிகார பகிர்வு அவசியம். ஆட்சி பங்கு எங்கள் உரிமை. மக்கள் தீர்மானிப்பார்கள்’’ என்று சலசலப்பை அதிகப்படுத்தி இருக்கிறார் மாணிக்கம் தாகூர்.



