தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் 125 பேருடன் சென்ற ராணுவ விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலம்பிய விமானப்படைக்குச் சொந்தமான ‘லாக்ஹீட் மார்ட்டின் ஹெர்குலஸ் சி-130’ (Lockheed Martin Hercules C-130) ரக விமானம், அந்நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள புவேர்ட்டோ லெகுயிசாமோ (Puerto Leguizamo) என்ற இடத்திலிருந்து ராணுவ வீரர்களுடன் புறப்பட்டது. அமேசான் வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த இடத்திலிருந்து விமானம் கிளம்பிய சிறிது நேரத்திலேயே, அதாவது ஓடுபாதையிலிருந்து சுமார் 1.5 கி.மீ தொலைவிலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
விமானத்தில் மொத்தம் 114 பயணிகள் மற்றும் 11 ஊழியர்கள் என 125 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. விபத்தைத் தொடர்ந்து விமானம் தீப்பற்றி எரிந்ததால், அதில் இருந்த வெடிபொருட்கள் வெடித்துச் சிதறியுள்ளன.

காயமடைந்த ராணுவ வீரர்களை மோட்டார் சைக்கிள்கள் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. தற்போது வரை 48 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், விபத்துக்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இருப்பினும், பழைய விமானங்களைப் பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் மற்றும் பராமரிப்பு குறைபாடுகள் குறித்து கொலம்பிய அதிபர் கஸ்டாவோ பெட்ரோ கவலை தெரிவித்துள்ளார். ராணுவத்தை நவீனப்படுத்துவதில் உள்ள தாமதங்களே இதுபோன்ற விபத்துகளுக்குக் காரணம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

விபத்து நடந்த பகுதி பெரு மற்றும் ஈக்வடார் எல்லைகளுக்கு அருகில் உள்ள அடர்ந்த வனப்பகுதி என்பதால், மீட்புப் பணிகளில் சவால்கள் நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.(Online Tamil News)


