லான்செட் (Lancet) மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வறிக்கை, இந்தியாவில் ஆண்களைப் பாதிக்கும் புரோஸ்டேட் புற்றுநோய் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்களைத் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையின்படி, உலகளவில் புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு 2040-ஆம் ஆண்டிற்குள் இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்தியாவில், கடந்த சில ஆண்டுகளில் மட்டும் இந்தத் தொற்று 30% வரை உயர்ந்துள்ளது. 2020-ஆம் ஆண்டில் சுமார் 38,000-ஆக இருந்த புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை, வரும் 2040-ஆம் ஆண்டில் 71,000-க்கும் மேலாக உயரக்கூடும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். மக்கள் தொகையில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும், மாறிவரும் வாழ்க்கை முறையுமே இந்த அதீத வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை, பெரும்பாலான ஆண்கள் நோய் முற்றிய நிலையிலேயே மருத்துவமனைக்கு வருவது மிகப்பெரிய சவாலாக உள்ளது. சிறுநீர் கழிப்பதில் சிரமம், அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றுதல், சிறுநீரில் இரத்தம் வெளியேறுதல் மற்றும் முதுகு அல்லது இடுப்புப் பகுதியில் தொடர்ச்சியான வலி போன்றவை இதன் முக்கிய அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவது உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

குறிப்பாக 50 வயது கடந்த ஆண்கள் மற்றும் குடும்பத்தில் புற்றுநோய் பாதிப்பு பின்னணி கொண்டவர்கள் 45 வயது முதலே ‘பி.எஸ்.ஏ’ (PSA) எனப்படும் இரத்தப் பரிசோதனையைச் செய்துகொள்வது அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். விழிப்புணர்வு இல்லாமை மற்றும் முறையான பரிசோதனைகளை மேற்கொள்ளத் தவறுவதே உயிரிழப்புகள் அதிகரிக்கக் காரணமாக இருப்பதால், ஆரம்பக்கால கண்டறிதலே இதற்கான சிறந்த தீர்வாக முன்வைக்கப்படுகிறது.(Online Tamil News)


