டென்மார்க் நாட்டின் பேட்மிண்டன் ஜாம்பவானும், இரண்டு முறை ஒலிம்பிக் தங்கம் வென்றவருமான விக்டர் ஆக்சல்சன், சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே அவரைத் தொடர்ந்து வாட்டி வதைத்து வந்த முதுகு வலி மற்றும் காயம் காரணமாக இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

2025-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முதுகு அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் குணமடைய முயற்சி செய்த போதிலும், மீண்டும் சர்வதேச தரத்திலான போட்டிகளில் விளையாடும் அளவிற்கு அவரது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. “எனது உடல் இப்போது ஓய்வு கேட்கிறது” என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ள ஆக்சல்சன், மருத்துவர்களின் அறிவுரைப்படி இந்த கடினமான முடிவை எடுத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பேட்மிண்டன் உலகின் ஈடுஇணையற்ற வீரராகத் திகழ்ந்த ஆக்சல்சன், 2021 டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து இரண்டு முறை தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தவர். இது தவிர, 2017 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் உலக சாம்பியன் பட்டங்களையும் வென்றுள்ளார். சுமார் 183 வாரங்கள் உலகின் நம்பர் 1 வீரராகத் திகழ்ந்த அவர், பத்து சூப்பர் 1000 பட்டங்கள் உட்பட பல சர்வதேச விருதுகளைக் குவித்துள்ளார்.

விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், பேட்மிண்டன் மீதான தனது ஆர்வம் குறையாது என்றும், எதிர்காலத்தில் இந்த விளையாட்டை மேம்படுத்த தொடர்ந்து பாடுபடுவேன் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். இவரது இந்தத் திடீர் ஓய்வு உலகெங்கிலும் உள்ள பேட்மிண்டன் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.(Online Tamil News)


