*தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் 10 பேரைக் கொண்ட விவசாயக் குடும்பத்தில் 3ஆவது குழந்தையாக பிறந்தவர் இரா.நல்லகண்ணு
*பள்ளிப்பருவத்தில் காந்தியவாதியாக இருந்தார்; ’வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் மாணவர்களை திரட்டி போராடினார். நெல்லையில் நடந்த சுதந்திரப் போராட்டங்களில் பங்கெடுத்தார்
*16வயதிலேயே கம்யூனிஸ்ட் கட்சியில் சேர துடித்தார். கட்சியில் உறுப்பினர் ஆக 18 வயது ஆக வேண்டும் என்றதால் அது வரை காத்திருந்து 18 வயது வந்ததும் கம்யூனிஸ்ட்டில் சேர்ந்தார்
*1943இல் கம்யூனிஸ்டில் இணைந்த நல்லக்கண்ணு நூற்றாண்டைக் கடந்தும் கடைசி வரை அதே கட்சியில் இயங்கி வந்தார்
தோழரின் பாரதி பற்று!
*பாரதியாரின் பாடல்களும், திரு.வி.க.வின் எழுத்துகளும் நல்லகண்ணுவை புரட்டிப்போட்ட நெம்புகோல்கள்
* காசியில் பாரதி வாழ்ந்த வாழ்க்கை குறிப்புகளை சேகரித்து கட்டுரை எழுதினார்
*பாரதி மீதான பற்றின் காரணமாக தன் முதல் மகளுக்கு ‘காசி பாரதி’ என்றும், பேத்திக்கு ’பாரதி கண்ணம்மா’ என்றும் பெயர் வைத்தார்

சாதி தொடர் கொலைகளை தடுத்த தோழர்!
*1996இல் தென் மாவட்டங்களில் நடந்த சாதிக் கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்
* ஒரு சாதியில் ஒருவர் கொல்லப்பட்டால் எதிர்சாதியில் ஒருவர் கொல்லப்படும் தொடர் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நல்லகண்னு
*தன் மாமனாரும் சாதி ஒழிப்பு போராளியுமான அன்னசாமி வெட்டி படுகொலை செய்யப்பட்டபோது சிலர் செய்த தவறுக்காக ஒரு சமூகத்தையே குற்றவாளியாக்க முடியாது என்று சொல்லி அமைதியை ஏற்படுத்த பாடுபட்டார்
*மாமனார் அன்னச்சாமி மரணத்திற்கு அரசு கொடுத்த இழப்பீட்டை, சாதி கலவரத்தில் பாதிக்கப்பட்ட இரு சமூக குழந்தைகளின் கல்வி உதவிக்கு கொடுத்துவிட்டார்
*சாதிக் கட்டமைப்பை உடைப்பதும், சுரண்டல் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதையும் லட்சியமாகக் கொண்டவர்
ஒடுக்கப்பட்ட மக்களின் உற்ற தோழர்!
*அக்காலத்தில் தலித்துகளுக்கு நிலையான வீடுகள் இல்லாததால், ‘ஓடும் குடிகள்’ என்று அழைக்கப்பட்டனர். இந்த நிலையை மாற்றினார் நல்லகண்ணு. தலித் மக்களை திரட்டி போராடி அவர்கள் குடியிருப்பதற்கான மனை உரிமையை பெற்றுக் கொடுத்தார்
*நான்குநேரி வானமாமலை கோவிலுக்குள் அழைத்துச் செல்லும் போராட்டம், பொதுவீதிகளில் செருப்பணிந்து நடக்கும் போராட்டம், வீடுகளுக்கு நிலை வைத்துக்கொள்ளும் உரிமை போராட்டம் என்று ஒடுக்கப்பட்ட மக்களின் உற்ற தோழராக விளங்கினார்
* ‘உழுபவனுக்கே நிலம் சொந்தம்’ போராட்டத்தில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த நல்லக்கண்ணு கைதானார். 11 தோழர்களுக்கு ஆயுள் தண்டனை -7 ஆண்டுகள் சிறையில் இருந்தார். போராட்டத்தில் ஈடுபட்ட சக தோழர்களை காட்டிக் கொடுக்கச் சொல்லி போலீசார் சுருட்டை வைத்து மீசையை பொசுக்கியபோதும் தோழர்களை காட்டிக்கொடுக்கவில்லை. அன்று முதல் மீசையை துறந்துவிட்டார்

*2010இல் தனது 86 வயதிலும் நெல்லை தாமிரபரணியில் நடந்த கனிம வளக் கொள்ளைக்கு எதிராக போராடி, நீதிமன்றத்தில் நேரடியாக வாதாடி வென்றார்

தோழரின் கொடை!
*தோழரின் 80ஆவது பிறந்தநாளில் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட 1 கோடி ரூபாயை கட்சி நிதிக்கே திரும்ப கொடுத்துவிட்டார்
*அம்பேத்கர் விருதுடன் தமிழ்நாடு அரசு அளித்த 1 இலட்சம் ரூபாயை கட்சிக்கு பாதியும் விவசாய சங்கத்திற்கு பாதியும் கொடுத்துவிட்டார்
*தமிழின் வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டிற்கும் பாடுபட்ட தோழர் நல்லகண்ணுவுக்கு கடந்த 2022இல் தகைசால் விருது வழங்கி மரியாதை செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
*தகைசால் விருதுடன் தனக்கு அளிக்கப்பட்ட 10 இலட்சம் ரூபாயுடன் தனது பங்கு 5ஆயிரம் ரூபாயையும் சேர்த்து முதலமைச்சரின் நிவாரண நிதிக்கே கொடுத்துவிட்டார்
*மக்களின் பொதுப் பிரச்சனைகளுக்காக கடைசி வரை களத்தில் நின்று கை கொடுத்த தோழர், அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, லட்சியத்தில் உறுதிக்கு சொந்தக்காரர்
காலத்தின் கொடுமை!
*1967, 1977இல் சட்டமன்ற தேர்தல்களில் அம்பாசமுத்திரத்திலும், 1999 மக்களவைத் தேர்தல் கோவையிலும் போட்டியிட்டார்
*அரசியில் கலங்கரை விளக்கமாக இருக்கும் தோழர் நல்லகண்ணு, போட்டியிட்ட மூன்று தேர்தல்களிலும் தோற்கடிக்கப்பட்டது காலத்தின் கொடுமை
எளிமையின் சிகரம்!
* தமிழ்ச் சான்றோர் பேரவை நிறுவனத் தலைவர் அருணாசலம் கொடுத்த காரையும் கட்சி வளர்ச்சிக்கே கொடுத்துவிட்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் முழு நேர ஊழியராக இருந்ததால் கிடைத்த அலவனஸ் தொகை 2,500 ரூபாய் போதும் என்று வாழ்ந்தவர் தோழர் நல்லகண்ணு
*தன் மகள் ஆண்டாளின் காது குத்து நிகழ்ச்சிக்கு கவரிங் கடுக்கண் வாங்கிச்செல்லும் அளவுக்கு எளிமையின் சிகரமாக வாழ்ந்தவர் தோழர் நல்லகண்ணு

யாருக்கும் கிடைக்காத பாக்கியம்!
*இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்க நாளான 26.12.1924 தான் தோழர் இரா.நல்லகண்ணுவின் பிறந்த நாள். கடந்த 2024ஆம் ஆண்டு இரா.நல்லகண்ணுவுக்கு 100ஆவது பிறந்தநாள். அவர் சார்ந்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அதுதான் நூற்றாண்டு தொடக்க விழா. ’இப்படி ஒரு பொருத்தம் யாருக்கும் கிடைக்காது’ என்று பெரிமிதத்துடன் சொன்னார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
*தமிழக அரசியலின் தனிப்பெரும் அடையாளமாகத் திகழ்ந்த தோழர் இரா.நல்லகண்ணு இன்று (25.02.2026)ல் மறைந்தார்



