நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. தவெக அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றிருந்தாலும் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையான 113 இடங்கள் இல்லாததால் பிற கட்சிகளின் தயவை நாடி நிற்கிறது.
ஊழல் சக்தி என்று அதிமுகவை தேர்தல் பிரச்சாரத்தில் கடுமையாக விமர்சித்த விஜய் இன்றைக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அதிமுக எம்.எல்.ஏக்களின் தயவை நாடி இருக்கிறார்.

விஜய்க்கு ஆதரவு அளிக்க முன் வந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தேர்தலுக்கு முன்பு அதிமுக – தவெக கூட்டணி பேச்சுவார்த்தையில் விஜய்தான் முதல்வர் வேட்பாளர் என்று சொன்னபோதும், ஆளுக்கு இரண்டரை வருடம் முதல்வர் பதவி என்றபோதும் ஒப்புக்கொள்ளவில்லை எடப்பாடி பழனிசாமி.
அப்படிப்பட்டவர் இன்றைக்கு பாஜக தரும் அழுத்தத்தால் விஜய்க்கு ஆதரவு தர முன் வந்திருக்கிறார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமியும் விஜய்யும் சந்தித்து பேசி ஒரே காரில் பயணித்திருக்கிறார்கள். தவெகவினரோ இதை மறுக்கின்றனர்.

இது ஒரு புறம் இருக்க அதிமுக சீனியர்கள் சி.வி. சண்முகமும் எஸ்.பி.வேலுமணியும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். இருவரும் பின்னர் கூட்டாக சென்று எடப்பாடியை சந்தித்து பேசினர். தவெகவுக்கு ஆதரவு கொடுத்து அமைச்சரவையில் பங்கேற்கலாம் என்று வலியுறுத்தி உள்ளார்கள். தங்கமணி உள்ளிட்டோரும் ஆதரவு தரலாம் என்று பேசி இருக்கிறார்கள். ஆனால், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர் அதிமுகவுக்கு ஆதரவு தரக்கூடாது என்று அழுத்தம் கொடுத்தனர்.
விஜய்யை சிஎம் ஆக்கவா அதிமுகவினர் நமக்கு வாக்களித்தார்கள்? எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவர்கள் முகத்தில் முழிக்க முடியும்? என்று எடப்பாடியிடம் பல எம்.எல்.ஏக்கள் எகிறி இருக்கிறார்கள்.
இந்த களேபரத்திற்கு பின்னர்தான் தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.



