செய்தியாளர்களை சந்திக்க தயங்குகிறார் விஜய். மேடைகளில் பேசும் அவர் பிரஸ் மீட் நடத்த தயங்குவது ஏன்? என்று கடுமையான விமர்சனம் இருந்து வந்த நிலையில், ஆங்கில ஊடகமான என்.டி.டி.விக்கு மட்டும் தனியாக பேட்டி அளித்திருக்கிறார் விஜய். விஜயுடன் என்.டி.டி.வி.யினர் 45 நிமிடங்கள் உரையாடி இருக்கிறார்கள்.
அந்த பேட்டியில் விஜய் சொன்னதாக அவரை நேர்காணல் செய்த குழுவினர் சிலவற்றை தங்கள் ஊடகத்தில் பகிர்ந்துள்ளனர்.

கரூர் சம்பவம் குறித்து அப்போதும் சரி இப்போதும் சரி விஜய் எதுவும் பேசாமல் இருக்கிறார். இது குறித்த கேள்விக்கு, எல்லாவற்றுக்கும் நான் உடனடியாக எதிர்வினை ஆற்றுவதில்லை. எனக்கு புரிந்துகொள்ள அதிக நேரம் தேவைப்படும். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தன்னை துரத்திக் கொண்டிருக்கிறது. அந்த சம்பவம் நடந்ததை முழுமையாக புரிந்துகொள்ளவும், ஜீரணிக்கவும் எனக்கு நேரம் தேவைப்பட்டது என்று கூறியிருக்கிறார் விஜய்.
அரசியலுக்கு வருவது திடீரென்று எடுத்த முடிவு அல்ல என்றும், கொரோனா காலத்திற்கு பிறகு அரசியலுக்கு வரவேண்டும் என்று தீவிரமாக முடிவெடுத்தாக கூறியிருக்கிறார்.
இந்த தேர்தலோடு முடிந்துவிடும் அரசியல் அல்ல. 33 ஆண்டுகால சினிமா வாழ்வை விட்டு விலகுவது என்பது எளிதான முடிவு அல்ல. சினிமாவை விட்டு விட்டேன். என் எதிர்காலம் அரசியல்தான். தன் அரசியல் நீண்டகாலம் தொடரும் என்று கூறி இருக்கிறார்.

சினிமாவில் அரசியலில் தனக்கு முன்மாதிரிகள் குறித்து பேசிய விஜய், சினிமாவில் ஷாருக்கான் என்றும், அரசியலில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கலைஞர் என்று கூறியிருக்கிறார்.
அரசியலில் தவெகவின் நிலைப்பாடு வலதா, இடதா? மத்தியமமா? என்ற கேள்விக்கு, நான் இடதும் இல்லை, வலதும் இல்லை, மய்யமும் இல்லை. அரசியலில் மக்களின் பிரச்சனைகள்தான் முக்கியம் என்று கூறியிருக்கிறார்.

அரசியல் வருகையால் சினிமா பாதிக்கப்படும் என்று முன்பே எதிர்பார்த்தேன். அதற்காக மனதளவில் தயார் நிலையில் இருந்தேன். ஜனநாயகன் படம் பாதிக்கப்பட்டுள்ளதற்காக தயாரிப்பாளரின் நிலை தனக்கு வருத்தமாக இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார் vijay.



