விமான விபத்துகளில் சிக்கி உயிரிழக்கும் அரசியல் பிரமுகர்களின் நிகழ்வுகள் அவ்வப்போது நாட்டை உலுக்கி எடுத்து வருகிறது. மோகன் குமாரமங்கலம் முதல் அஜித் பவார் வரையிலும் தொடர்கிறது இந்த துயரம்.

31.5.1973ல் இந்திராகாந்தி அமைச்சரவையில் அங்கம் வகித்த, ஒன்றிய எஃகு மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் மோகன் குமாரமங்கலம், பயணித்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் டெல்லிக்கு அருகில் விபத்தில் சிக்கியதில் உயிரிழந்தார். சென்னையில் இருந்து இரவு 7.35 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் போயிங் 737 ரக விமானம் டெல்லி அருகே இரவு 10 மணி அளவில் தரை இறங்குவதற்கு சற்று முன்பாக விமானம் விழுந்து நொறுங்கியதில் 48 பேர் உயிரிழந்தனர். இதில் மோகன் குமாரமங்லத்துடன் சிபிஐ கோவை எம்.பி. கே.பாலதண்டாயுதம்(55), பஞ்சாப் முன்னாள் முதல்வர் குர்னாம் சிங் (74) உள்ளிட்டோரும் உயிரிழந்தனர். சிவகாசி எம்.பி. வி.ஜெயலட்சுமி, பானுசிங் பரூவா எம்.பி., ஒன்றிய பாசனத்துறை துணை அமைச்சர் பாலகோவிந்த வர்மா உள்ளிட்டோர் இந்த விபத்தில் உயிர்தப்பினர்.

23.6.1980 தினம் இந்தியாவுக்கு பேரிடியாக இருந்தது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் மூத்த மகன் சஞ்சய் காந்தி டெல்லியில் பயிற்சி ஹெலிகாப்டரில் சென்றபோது கட்டுப்பாட்டினை இழந்து வெடித்துச் சிதறியதில் உயிரிழந்தார். 33 வயதில் சஞ்சய் காந்தியின் மரணம் நாடெங்கிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
3.3.2001ல் காங்., மூத்த தலைவரும், விமான போக்குவரத்து துறை அமைச்சருமான மாதவராவ் சிந்தியா(56) உ.பி.யில் கான்பூர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தனி விமானத்தில் சென்றவர், மோசமான வானிலையால் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
3.3.2002ல் மக்களவை சபாநாயகராக இருந்த பாலயோகி(50) ஹெலிகாப்டரில் பயணித்தபோது ஆந்திராவில் கிருஷ்ணா மாவட்டத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

17.4.2004ல் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக இருந்த சவுந்தர்யா(31) பாஜக பிரச்சாரத்திற்காக பெங்களூருவில் இருந்து தனி விமானத்தில் சென்றபோது உயிரிழந்தார். ஜக்கூர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் விழுந்து நொறுங்கியதில் உயிரிழந்தார்.

2005ல் அரியானா அமைச்சர் ஓம் பிரகாஷ் ஜிண்டால், டெல்லியில் இருந்து சண்டிகருக்கு ஹெலிகாப்டரில் சென்றபோது ஹெலிகாப்டர் வெடித்து சிதறியதில் உயிரிழந்தார்.

2.9.2009ல் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகரெட்டி ஹெலிகாப்டரில் சென்றபோது அடர்ந்த வனப்பகுதியில் விமானம் சென்றபோது மாயமானது. தீவிர தேடுதல் வேட்டையில் மோசமான வானிலை காரணமாக விமானம் விபத்தில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது.
4.5.2011ல் அருணாச்சல பிரதேசம் முதல்வர் டோர்ஜி காண்டு, தவாங்கில் இருந்து இட்டா நகருக்கு ஹெலிகாப்டரில் சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

13.6.2025ல் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட 10 நிமிடங்களிலேயே வெடித்துச் சிதறியது. இதில் 241 பேர் உயிரிழந்தனர். இதில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி குறிப்பிடத்தக்கவர்.

28.1.2026 ல் மகாராஷ்டிரா துணை முதல்வர், தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார்(67) மும்பையில் இருந்து பாரமதிக்கு சார்ட்டர்ட் விமானத்தில் சென்றபோது பாராமதியில் விமானம் தரையிறங்க முயற்சித்தபோது விமானம் விபத்துக்குள்ளாகி வெடித்துச் சிதறியதில் அஜித் பவார் உயிரிழந்தார்.



