ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் மாவட்டத்தில் உள்ள ஒரு குடியிருப்பில் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் அங்கிருந்த வெடிபொருட்கள் வெடித்து சிதறியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி விஸ்வநாத ரெட்டி, மகாபுன்னிசா, அஸ்லம் பாஷா உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர்.

முதலில் வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததாகவும், அதன் அதிர்வால் அங்கு வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களும் வெடித்துச் சிதறியதால் விபத்தின் தீவிரம் அதிகரித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்த நிலையில்,அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அதில், 12 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடி விபத்தின் பயங்கரமான தாக்கத்தால் சம்பந்தப்பட்ட வீடும், அதனைச் சுற்றியுள்ள சில கட்டிடங்களும் இடிந்து பலத்த சேதமடைந்தன. தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.(Online Tamil News)


